Published : 22 Oct 2022 09:06 AM
Last Updated : 22 Oct 2022 09:06 AM

இந்தியா மதச்சார்பற்ற நாடு; இங்கு வெறுப்புப் பேச்சுக்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கட்டும்: ஃபரூக் அப்துல்லா

புதுடெல்லி: இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கே வெறுப்புப் பேச்சுக்களை பேசுவோர் மீது உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளதுபோல் போலீஸார் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கட்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை பேசுபவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவு விவரம்: நாட்டில் வெறுப்புச் சூழல் நிலவி வருவதால் புகார் மிகவும் தீவிரமானது. இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு இருக்கிறது. வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் காவல் துறை டிஜிபிக்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாருக்காக காத்திருக்காமல், காவல் துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நாட்டின் மதச்சார்பின்மை தன்மையை பாதுகாக்கும் நோக்கில், தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கவும், நடவடிக்கைகளை எடுக்கவும் காவல் துறை முன்வர வேண்டும். ஜனநாயகமும் மத நடுநிலையும் கொண்ட நாடான இந்தியாவில் இதுபோன்ற பேச்சுக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற பேச்சுக்கள் இந்துக்களுக்கு எதிராகவும் பேசப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஃபரூக் அப்துல்லா கருத்து: இதனை சுட்டிக்காட்டிப் பேசிய ஃப்ரூக் அப்துல்லா, உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கே வெறுப்புப் பேச்சுக்களை பேசுவோர் மீது உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளதுபோல் போலீஸார் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கட்டும். நாட்டை வலுப்படுத்த வேண்டுமானால் பன்முகத்தன்மையை வலுப்படுத்த வேண்டும். அதற்கு வெறுப்புப் பேச்சுக்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x