Published : 21 Oct 2022 04:31 PM
Last Updated : 21 Oct 2022 04:31 PM

பிரசாந்த் கிஷோர் Vs நிதிஷ் குமார் - ‘ஓர் உதவி... அவர் பற்றி மட்டும் கேட்காதீர்!’

பிரசாந்த் கிஷோருடன் நிதிஷ் குமார் | கோப்புப்படம்

பாட்னா: "பிரசாந்த் கிஷோர் விளம்பரத்திற்காக பேசுகிறார்" என்று குற்றம்சாட்டியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், "அவர் இளையவர், என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்" என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னரும் அந்த உறவுக்கான வாசலை நிதிஷ் குமார் இன்னும் திறந்தே வைத்திருப்பதாக தெரிவித்திருந்த பிரசாந்த் கிஷோரின் கருத்துக்கு நிதிஷ் குமார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், "எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். தயவுசெய்து அவரை (பிரசாந்த் கிஷோர்) பற்றி என்னிடம் கேட்காதீர்கள். நான் முன்பே சொல்லியிருக்கிறேன். யார் யார் என்னென்ன விரும்புகிறார்களோ அதனைப் பேசுகிறார்கள். அவர் விளம்பரத்திற்காக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். நான் அவர் மீது மரியாதை வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. அவரின் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அவர் வயதில் இளையவர். கடந்த காலத்தில் நான் யார் மீது எல்லாம் மரியாதை வைத்திருந்தேனோ அவர்கள் எல்லாம் என்னை எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பிஹார் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின்போது அம்மாநில முதல்வரை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அப்படியான ஒரு பேச்சில், "மக்கள் எல்லோரும் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, அந்தக் கட்சிக்கு எதிராக தேசிய கட்சிகளை ஒன்றிணைக்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பாஜகவுக்கான வாசலை அவர் முழுவதுமாக மூடிவிடவில்லை. தன்னுடைய கட்சியின் எம்பியும் ராஜ்ய சபாவின் துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலமாக பாஜகவுடன் அவர் தொடர்பில் இருக்கிறார்.

17 வருடங்களாக முதல்வராக இருந்துவரும் நிதிஷ் குமார், அதில் 14 வருடங்கள் பாஜகவின் துணையுடன் தான் முதல்வராக இருந்தார். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... சூழல் எப்போது மாறுகிறதோ அப்போது அவர் மீண்டும் பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்" என்று கூறியிருந்தார்.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர், ஐ-பேக் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளட்ட பல அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற உறுதுணை புரிந்துள்ளார். பின்னர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவராக அரசியலில் அடியெடுத்து வைத்தார். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2020-ம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிலிருந்து இருவரும் பொது வெளியில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x