Published : 21 Oct 2022 09:30 AM
Last Updated : 21 Oct 2022 09:30 AM

'ஜிகாத் இஸ்லாத்தில் மட்டுமில்லை; கிருஷ்ணரும், கிறிஸ்துவம் கூட பேசியுள்ளார்கள்' - காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவராஜ் பாட்டீல்

சிவராஜ் பாட்டீல் (இடமிருந்து வலமாக இரண்டாவதாக நிற்கிறார்)

புதுடெல்லி: ஜிகாத் இஸ்லாத்தில் மட்டுமில்லை. இந்து, கிறிஸ்துவ மதங்களிலும் அதுபற்றி பேசப்பட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மோஷினா கிட்வாயின் சுயசரிதை நூலை நேற்று புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ் பாட்டீல் வெளியிட்டார். அப்போது அவர், "இஸ்லாம் மதத்தில் ஜிகாத் இருப்பது பற்றி நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், ஜிகாத் இஸ்லாத்தில் மட்டுமல்ல இந்து, கிறிஸ்துவ மதங்களிலும் இருக்கிறது. மகாபாரதம், பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஜிகாத் பற்றி பேசியிருக்கிறார். குறிப்பாக மகாபாரதத்தில் அர்ஜுனனிடம் கிருஷ்ணன் ஜிகாத் பற்றி பேசியிருக்கிறார். ஒரு விஷயத்தைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறியும் அதை சிலர் புரிந்து கொள்ளவில்லை என்றால் வலிமையைப் பயன்படுத்தலாம் என்ற போதனைகள் உள்ளன. அப்போது ஆயுதங்களை ஏந்தி வருவது ஜிகாத், அது தவறானது என்று சொல்ல முடியாது என்று கீதையில் போதிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் அர்ஜுனனுக்கு கிருஷ்ணனுக்கு போதித்தார். கிறிஸ்துவ மதத்திலும் இயேசு கிறிஸ்து, "நான் இவ்வுலகில் அமைதியை நிலைநாட்ட வந்துள்ளேன் ஆனால் ஒரு வாளுடன் வந்துள்ளேன்" என்று கூறியுள்ளார். மோஷினா கிட்வாயின் நூல், ஒருவர் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றிக் கொண்டு அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பது எப்படி என்பதை விளக்கியுள்ளது. இப்போது உலகம் முழுவதுமே அமைதிக்கான தேவை இருக்கிறது" என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திக்விஜய் சிங், சசி தரூர், ஃபரூக் அப்துல்லா, சுஷில்குமார் ஷிண்டே போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். சிவராஜ் பாட்டீலின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிவராஜ் பாட்டீல் இந்து வெறுப்பை விதைத்துள்ளதாகவும், வாக்குவங்கி அரசியல் செய்வதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x