Published : 20 Oct 2022 12:05 PM
Last Updated : 20 Oct 2022 12:05 PM
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மொபைல் பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவரை தனது அஜாக்கிரதையால் துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனது துப்பாக்கியை வெளியே எடுத்து காண்பித்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி தற்செயலாக இளைஞரைச் சுட்டதாக கூறப்படும் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது கடையில் உள்ள சிசிடிவி காமிராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 50 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், மொபைல் பழுது நீக்கும் கடையில் நிற்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் பணி காரணமாக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் துப்பாக்கியை எடுத்து அருகில் நிற்பவரிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
தனது துப்பாக்கியை அஜாக்கிரதையாக அந்த போலீஸ் அதிகாரி கையாண்டு கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. துப்பாக்கி குண்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது பாய்ந்திருக்கிறது. சுடப்பட்ட நபர் யார் என்பது வீடியோவில் தெரியவில்லை. துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் குறித்து அமிர்தசரஸ் வடக்கு ஏசிபி வீரேந்தர் சிங் கூறுகையில், "நேரில் பார்த்த சாட்சியங்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காயம் அடைந்த நபரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது" என்று தெரிவித்தார்.
சம்பவம் குறித்த வீடியோ வைரலானதைத் தொடந்து, மொபைல் கடையினுள் தேவையில்லாமல் துப்பாக்கியை எடுத்துக்காட்டிய போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதே போன்றதொரு சம்பவம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்தது. அக்.5-ம் தேதி புல்வாமா பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்து. இதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அம்மாநில போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | A youth working in a mobile shop got injured in an alleged accidental firing by a policeman in Punjab's Amritsar
The accused police official has been suspended. We've recovered the CCTV footage: Varinder Singh, ACP North, Amritsar
(CCTV visuals) pic.twitter.com/N8R0VpMhH0— ANI (@ANI) October 19, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT