Published : 20 Oct 2022 05:12 AM
Last Updated : 20 Oct 2022 05:12 AM

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி -  9 ஆயிரம்பேர் வாக்களித்த இந்த தேர்தலில் கார்கே 7,897 வாக்குகள்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி. படம்: பிடிஐ

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே (80) வெற்றி பெற்றுள்ளார். சோனியா குடும்பத்தைச் சேராத ஒருவர் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்சிக்குத் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிட்டனர். கடந்த 17-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், வாக்களிக்கத் தகுதி பெற்ற 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 96 சதவீதத்தினர் வாக்களித்தனர். நேற்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இத்தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்
தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி அறிவித்தார். கார்கே வரும் 26-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக ரன்தீப் சுர்ஜேவாலா எம்.பி. அறிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள சசிதரூர், ‘‘கட்சி நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ஆதரவு கிடைத்தது எனது பாக்கியம்’’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கட்சி நிர்வாகிகளின் முடிவை தாழ்மையுடன் ஏற்கிறேன். மல்லிகார்ஜுன கார்கேவின் வழிகாட்டுதலின் கீழ், அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஆந்திராவில் தேசிய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தியிடம், கட்சியில் புதிய தலைவரின் பங்கு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘காங்கிரஸ் கட்சித் தலைவரின் பங்கு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அதுபற்றி கார்கேதான் கூறமுடியும். கட்சியில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும், கார்கேதான் தீர்மானிப்பார்’’ என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, "பழம் பெரும் கட்சிக்காக, வாழ்வைத் தியாகம் செய்த சோனியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தியுடன் இணைந்து பணியாற்றுவேன்" என்றார்.

சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜுன கார்கே, அரசியலில் 50 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். கர்நாடகாவிலிருந்து நிஜலிங்கப்பாவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் கார்கே, ஜெகஜீவன் ராமுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் தலைவராகும் 2-வது தலித் தலைவராவார். இவர் குர்மித்கல் தொகுதியிலிருந்து 9 முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர். கர்நாடக காங்கிரஸ் தலைவராகவும், அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இவருக்கு முதல்வர் பதவி 4 முறை கைநழுவியது.

1969-ல் காங்கிரஸில் சேர்ந்த இவர், 40 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தபின், 2008-ல் தேசிய அரசியலுக்கு நகர்ந்தார். 2014 மக்களவைத் தேர்தல் வரை அவர் தோல்வியை சந்திக்கவில்லை. மன்மோகன் சிங் அமைச்சரவையில் ரயில்வே, தொழிலாளர் நலம், சமூக நலத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2019 மக்களவைத் தேர்தலில்தான் முதல்முறையாக தோல்வியைச் சந்தித்தார்.

இதையடுத்து, அவரை சோனியா காந்தி, 2020-ல் மாநிலங்களைவை உறுப்பினராக்கி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலும் அமரச் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை தீவிரமாக விமர்சிப்பவர் கார்கே. அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸுக்கு இவர் தலைமை ஏற்பது, கர்நாடக காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம், நம்பிக்கையை அளித்துள்ளது. இவரது 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர், முதல்வர் வாழ்த்து

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘காங்கிரஸின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள கார்கேவுக்கு எனது வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக இருக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x