Published : 20 Oct 2022 12:11 AM
Last Updated : 20 Oct 2022 12:11 AM

புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கே சென்று வாழ்த்திய சோனியா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார். அவரை சோனியா காந்தி வாழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி சசிதரூரும் போட்டியிட்டனர். தேர்தலுக்காக நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் இதில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1072 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன்படி, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகியுள்ளார். கடந்த 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்பது இதுவே முதல்முறை.

காங்கிரஸ் தலைவராக தேர்வான பிறகு மல்லிகார்ஜுன் கார்கேவின் முதல் நடவடிக்கையாக சோனியா காந்தியை சந்திக்க செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சந்திப்புக்காக சோனியா காந்தியிடம் மல்லிகார்ஜுன் கார்கே நேரம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், டெல்லியில் உள்ள தனது பத்தாம் நம்பர் ஜன்பத் இல்லத்தில் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்த சோனியா, மாறாக ராஜாஜி மார்க்கில் உள்ள கார்கேவின் இல்லத்துக்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

கார்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து சோனியா காந்தி தனது வாழ்த்தை தெரிவித்தார். சோனியா காந்தியின் இந்த செயல் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்கு சோனியா செல்வதுகிடையாது. விதிவிலக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டுக்கு மட்டுமே சென்றுள்ளார். இந்தநிலையில்தான் கார்கேவின் வீட்டுக்கு சோனியா சென்றுள்ளது காங்கிரஸ்காரர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x