Published : 19 Oct 2022 01:45 PM
Last Updated : 19 Oct 2022 01:45 PM
பாட்னா: பிஹார் மாநிலத்தில் 7ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில் காஷ்மீர் தனிநாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பது பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுக்கிடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக ஆகிய இருகட்சிகளுக்கு இடையேயான மோதலுக்குப் புதிய பேசு பொருளாகி உள்ளது அங்குள்ள பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான விடை. பிஹார் மாநிலம் கிஷன்கஞ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற 7ஆம் வகுப்புக்கான தேர்வில், கீழ்கண்ட நாடுகளின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கான விடையாக சீனா, நேபால், இங்கிலாந்து, காஷ்மீர், இந்தியா ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்த கேள்வி விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய பள்ளியின் தலைமைஆசிரியர் கூறுகையில்,"இந்த கேள்வித்தாள் பிஹார் கல்விவாரியத்தின் மூலமாக பெறப்பட்டது. காஷ்மீர் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று கேட்கப்பட்டிருக்க வேண்டும். தவறுதலாக காஷ்மீர் நாட்டு மக்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மனித தவறு" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பாஜக, மாநில முதல்வர் நிதிஷ் குமாரை குற்றம்சாட்டியுள்ளது. பிஹார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ஐக்கிய ஜனதாதளம் கட்சி காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக நினைக்கவில்லை போலும் என்று தெரிவித்தவர் மாநிலத்தில் சீமாச்சல் பகுதியில் உள்ள இந்தி பள்ளிகள் மூடப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள ஜேடியுவைச் சேர்ந்த சுனில் சிங், "காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே. யாரும் அதை மறுக்கவில்லை. பாஜக தேவையில்லாமல் இதை பிரச்சினையாக்குகிறது என்று தெரிவித்தார்.
பிஹார் மாநிலத்தின் முதல்வரான நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். மேலும் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடாது என்று தீவிரமாக இயங்கி வருகிறார். இதனால், மாநிலத்தில் நிகழும் சின்னச்சின்ன விஷயங்களுக்கு கூட ஜேடியு கட்சியும் பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொள்வது வழக்கமாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT