Published : 19 Oct 2022 12:10 PM
Last Updated : 19 Oct 2022 12:10 PM
கட்டாக், ஒடிசா: வாங்கிய கடனை சொன்ன தேதியில் திருப்பிச் செலுத்தாததால், இளைஞர் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் கட்டி 2 கிமீ ஓடவிட்டுச் சென்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியான சம்பவம் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் 22 வயதான ஜெகன்நாத் பெஹரா என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நடத்துவதற்காக, தனக்கு தெரிந்த நபர்களிடம் ரூ.1,500 கடனாகப் பெற்றுள்ளார். பணத்தை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் சொன்ன தேதியில் ஜெகன்நாத்தால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். கடனைத் திருப்பிச் செலுத்தாத ஜெகன்நாத்தை 12 அடி நீள கயிறு ஒன்றில் கட்டி, அதன் மறுமுனையை ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டியுள்ளனர். பின்னர் ஸ்டூவயர்ட்பட்னா சதுக்கம் என்ற இடத்திலிருந்து சுதாகத் சதுக்கம் என்ற இடம் வரை 2 கிமீ தூரத்திற்கு கட்டாக்கின் பரபரப்பான சலை வழியாக ஜெகன்நாத்தை ஓடவிட்டு இழுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவளைதளத்தில் வைராலானது.
இந்தநிலையில், சுதாகத் பகுதியில் இருந்த உள்ளூர்வாசிகள் இந்த விவாகரத்தில் தலையிட்டு ஜெகன்நாத்தை விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜெகன்நாத் திங்கள்கிழமை போலீஸில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவரை இழுத்துச் செல்லப்பயன்படுத்திய ஸ்கூட்டி,கயிற்றை பறிமுதல் செய்துள்ளர்.
மேலும், சம்பவம் நடந்த 2 கிமீ துரத்திற்குள் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஏன் இந்தச் செயலைத் தடுத்து நிறுத்தவில்லை என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"இதுதொடர்பாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் மீது, சட்டவிரோதமாக சிறைபிடித்தல், ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கட்டாக் நகர துணை ஆணையர் பினாக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
Horrific | Man tied to a two-wheeler and made to run for about two kilometers on a busy road just because he failed to repay Rs 1,500 on time #Cuttack pic.twitter.com/QgGp49n33S
— Raju Kumar (@rajudelhi123) October 18, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT