Published : 18 Oct 2022 06:23 AM
Last Updated : 18 Oct 2022 06:23 AM
புதுடெல்லி: மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பொது மக்களுக்கு ஜன்-தன் வங்கி கணக்குகளின் வாயிலாக ரூ.25 லட்சம் கோடியை பரிமாற்றம் செய்துள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 50 கோடி ஜன்-தன் வங்கி கணக்குகளில் பாதி யளவு பெண்களால் தொடங் கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் மேற் கொள்ளப்படுகிறது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் ஜன்-தன் வங்கிக் கணக்குகள் மூலமாகத்தான் தற்போது வழங்கப்படுகின்றன. ஏழைகளுக்கு இந்த கணக்குகள் மூலம் ரூ.25 லட்சம் கோடியை அரசு இதுவரையில் பரிமாற்றம் செய்துள்ளது.
இந்த கணக்குகளில் ஏழைகள் ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு டெபாசிட் செய்து பாதுகாப்பான நிதி சூழலை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். நேரடி மானியத் திட்டத்தை சீரிய முறையில் அமல்படுத்தியதன் விளைவாக 4 கோடி போலி ரேஷன் கார்டுகளும், அதே அளவுக்கு தவறான எல்பிஜி சிலிண்டர் இணைப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களுக்காக மத்திய அரசு ரூ.100 ஒதுக்கினால் இறுதியில் ரூ.15 மட்டுமே அவர்களை சென்றடைகிறது. இடைத் தரகர்களின் பையில் ரூ.85 சென்றுவிடுகிறது என முன்னாள் பிரதமர்ராஜீவ் காந்தி வருத்தத்துடன் கூறியிருந்தார். ஆனால், இன்று மத்திய அரசு ஏழைகளுக்கு ஒதுக்கும் ரூ.100 ரூபாயில் ஒரு பைசா கூட குறையாமல் முழு தொகையும் அவர்களை சென்றடைகிறது.
இது, ஒரு மாபெரும் சாதனை. அதேபோன்று, எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினையும் அவர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT