Published : 18 Oct 2022 06:37 AM
Last Updated : 18 Oct 2022 06:37 AM

உப்பு கரைசல் கண்டுபிடித்து பலரை காப்பாற்றி ‘ஓஆர்எஸ்’ தந்தை என்று புகழப்பட்ட பிரபல மருத்துவர் திலீப் காலமானார்

திலீப் மகாலனபிஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப் மகாலனபிஸ். இவர் குழந்தை நல மருத்துவராகத் தனது பணியை தொடங்கினார். கொல்கத்தாவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் (ஐசிஎம்ஆர்) ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். அங்கு கடந்த 1966-ம் ஆண்டு மருத்துவர்கள் டேவிட் ஆர் நளின் மற்றும் ரிச்சர்ட் ஏ கேஷ் ஆகியோருடன் இணைந்து ‘ஓரல் ரீஹைட்ரேஷன் தெரபி’ (ஓஆர்டி) எனப்படும் மறுநீரேற்ற சிகிச்சை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

அவர்களுடைய தீவிர முயற்சியால் ‘ஓரல் ரீஹைட்ரேஷன் சொலூஷன்’ (ஓஆர்எஸ்) என்றழைக்கப்படும் உப்பு கரைசல் கண்டுபிடிக்கப்பட்டது. ஓஆர்எஸ் என்பது சோடியம், பொட்டாசியம் மற்றும் சிட்ரிக் ரசாயனங்கள் கலந்த உப்பு கரைசல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வங்கதேசத்தில் கடந்த 1971-ல் நடைபெற்ற போரால் அங்கிருந்து ஒரு கோடி பேருக்கும் மேற்பட்டோர் மேற்குவங்கத்துக்குள் அகதிகளாக வரத் தொடங்கினர். அவர்கள் தங்கியிருந்த முகாம்களில் காலரா பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமானார் உயிரிழந்த வண்ணம் இருந்தனர். அந்த நேரத்தில் நீரிழப்பு ஏற்பட்ட ஏராளமானோருக்கு மருத்துவர் திலீப் கண்டுபிடித்த ஓஆர்எஸ் உப்பு கரைசல் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்தன.

அகதிகள் முகாமில் காலராவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயிரிழப்பு குறைந்தது.

அதன்பின்னர் 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக ஓஆர்எஸ் பிரபலமானது. மேலும், கொலம்பியா பல்கலைக்கழகம், தாய்லாந்து அரசு உட்பட பல்வேறு நாடுகள் திலீப்பை கவுரவித்து பரிசுகள் வழங்கின. இதனால் மருத்துவர் திலீப் பெயரை அன்பாக ஓஆர்எஸ் என்றே அழைத்தனர். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மருத்துவர்கள், பிரமுகர்கள் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் சாந்தா தத்தா கூறும்போது, ‘‘ஓஆர்எஸ் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. மருத்துவர் திலீப் மகாலனபிஸ் கண்டுபிடிப்பு மகத்தானது. உலகளவில் ஓஆர்எஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது வங்கதேச போரின் போது காலராவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணிசமாகக் குறைத்தது’’ என்று புகழாரம் சூட்டினார்.

கொல்கத்தாவில் குழந்தைகள் நல மையத்தில் முதன்முதல் பணியைத் தொடங்கினார் மருத்துவர் திலீப். அந்த மையத்துக்கு ரூ.1 கோடியை நன்கொடையாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x