Published : 18 Oct 2022 04:41 AM
Last Updated : 18 Oct 2022 04:41 AM
புதுடெல்லி: பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 12-வது தவணையாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி நிதியுதவியை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மேலும், `ஒரே நாடு, ஒரே உரம்' திட்டம் மற்றும் 600 வேளாண் வளர்ச்சி மையங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் `கிசான் சம்மான் சம்மேளன் 2022' மாநாட்டை பிரதமர் நேற்று தொடங்கிவைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 13,500 விவசாயிகளும், 1,500 வேளாண் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு கோடி விவசாயிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். மாநாட்டில், வேளாண் கண்காட்சி அரங்கையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது: `பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திரா' என்ற பெயரில் நாடு முழுவதும் 600 வேளாண் வளர்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உரம் விற்பனை செய்யப்படும்.
பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.16,000 கோடி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரும் பணத்தைப் பறிக்க முடியாது. தீபாவளிக்கு முன்பாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த 6 பெரிய யூரியா ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சட்டவிரோதமாக யூரியா விற்கப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது.
எந்த நிறுவனத்தின் உரத்தை வாங்குவது என்பது தொடர்பாக விவசாயிகளிடம் குழப்பம் இருந்தது. பிரபல நிறுவனங்களின் உரத்தை அதிக விலைக்கு வாங்கினர். இதனால், சாகுபடிச் செலவு அதிகரித்தது. இதைக் கருத்தில் கொண்டு `ஒரே நாடு, ஒரே உரம்' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையில், தரமான உரம் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.
சர்வதேச அளவில் தினை மீதான மதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு, தினை விதைகளின் தரத்தை அதிகரிக்க பல்வேறு ஆய்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச வேளாண் ஏற்றுமதிப் பட்டியலில், முதல் 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், வேளாண் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. `ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் ஏற்றுமதி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை எளிதாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிகிறது.
இ-நாம் இணைய வேளாண் சந்தை மூலம், விளை பொருட்களை நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. 1.75 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், 2.5 லட்சம் வியாபாரிகள் இ-நாம் வேளாண் சந்தை யுடன் இணைந்துள்ளனர். இந்த சந்தை மூலம் நடந்த பணப் பரிவர்த்தனை ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஒரு கிலோ யூரியாவை மத்திய அரசு ரூ.80 விலைக்கு வாங்கியது. எனினும், விவசாயிகளுக்கு ஒரு கிலோ யூரியா ரூ.6-க்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடியை செலவிடும்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, இறக்குமதி குறைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதியைக் குறைக்க உள்நாட்டில் உயிரி எரிபொருள், எத்தனால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
2015-ல் பருப்பு வகைகளை அதிக சாகுபடி செய்ய அழைப்பு விடுத்தேன். இதை ஏற்று விவசாயிகள் பருப்பு சாகுபடியில் கவனம் செலுத்தினர். இதனால், பருப்பு வகை உற்பத்தி 70 சதவீதம் வரை அதிகரித்தது. இதேபோல, சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க, எண்ணெய் வித்துகள் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து, உரம் பற்றிய மின் இதழான `இந்தியன் எட்ஜ்'-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார். இதில், வேளாண் துறை சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாநாட்டில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT