Published : 18 Oct 2022 05:42 AM
Last Updated : 18 Oct 2022 05:42 AM
இந்து மற்றும் முஸ்லிம் இடையிலான வெறுப்பு பேச்சுகள் மற்றும் மத மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, டெல்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்ட 5 பிரபலமான முஸ்லிம் பிரமுகர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்துப் பேசினர்.
அப்போது, இந்து-முஸ்லிம் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தினர்.
அடுத்த சில தினங்களில் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் (ஏஐஐஓ) தலைவர் இமாம் உமர் அகமது இலியாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்தித்துப் பேசினார். அப்போது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த், ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் மற்றும் தாருல் உலூம் தியோபந்த் ஆகிய 3 முக்கிய அமைப்புகளின் தலைவர்களான சதாதுல்லா ஹுசைனி, முகமது மதானி மற்றும் அர்ஷத் மதானி ஆகியோருடன் குரேஷி உள்ளிட்ட 5 முஸ்லிம் முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, மோகன் பாகவத் துடன் மத நல்லிணக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்த 3 தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து சதாதுல்லா ஹுசைனியின் தேசிய ஊடக செயலாளர் தன்வீர் அகமது கூறும்போது, “பல்வேறு மதத்தினர் வசிக்கும் சமுதாயத்தில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அனைத்து சந்திப்புகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்றார்.
பல்வேறு மதத்தினர் வசிக்கும் சமுதாயத்தில் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். அனைத்து சந்திப்புகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT