Published : 18 Oct 2022 12:50 AM
Last Updated : 18 Oct 2022 12:50 AM
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது சிபிஐ.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.
இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்கு இன்று காலை சிசோடியா ஆஜரானார். அவரிடம் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தியது சிபிஐ. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிசோடியா சிபிஐ மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதன்படி, விசாரணையின்போது சிபிஐ தரப்பில் தான் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர வற்புறுத்தப்பட்டதாகவும், அதற்காக முதல்வர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும், அதை மறுத்தால் இதுபோன்ற வழக்குகள் என் மீது தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ மிரட்டியதாக குற்றம் சாட்டினார்.
மேலும், சத்யேந்தர் ஜெயின் மீதான உண்மை வழக்குகள் என்ன என்றும் என்னிடம் கேட்கப்பட்டது. ஆனால் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன் என்றும் ஆம் ஆத்மியை விட்டு பாஜகவுக்கு வரமாட்டேன் சிபிஐயிடம் தெரிவித்தேன் என்றும் சிசோடியா கூறினார்.
சிசோடியாவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை வெளியிட்ட சிபிஐ, அதை திட்டவட்டமாக மறுத்ததுடன், "சட்டப்பூர்வ முறையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. எப்ஐஆர் குற்றச்சாட்டுகள் மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்தே அவரிடம் விசாரிக்கப்பட்டது. அவரது வாக்குமூலம் சரிபார்க்கப்படும். மீண்டும் சட்டப்படியே விசாரணை தொடரும். விசாரணை தேவைகளின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT