Published : 17 Oct 2022 04:18 AM
Last Updated : 17 Oct 2022 04:18 AM

நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப்பதிவு: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர்.

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் 6-வது முறையாக கட்சித் தலைவர் பதவிக்கு இன்று (அக். 17) தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தனது ராஜினாமா கடிதத்தில் கட்சி மேலிடத்தை விமர்சித்திருந்தார். இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் போட்டியிடப் போவதில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இத்தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோரிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா குடும்பத்தினர் மற்றும்மூத்த தலைவர்களின் ஆதரவு இருப்பதால், அவர் வெளிப்படையாக அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் கருதப்படுகிறார். அதேசமயம், மாற்றத்துக்கான வேட்பாளராக சசிதரூர் தன்னை முன்னிறுத்தி உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கின்றனர். இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களிக்கின்றனர்.

கர்நாடகாவில் ராகுல் வாக்களிப்பு

தேசிய ஒற்றுமை யாத்திரையில்ஈடுபட்டுள்ள ராகுல், கர்நாடகமாநிலம் பெல்லாரியில் சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பார்.

வாக்குப்பதிவுக்குப் பின்னர் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்படும். தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும்.

காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "கடந்த 1939, 1950, 1997, 2000-ம் ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தல்களை ஊடகங்கள் பெரிதுபடுத்தின. 1977-ல் நடைபெற்ற தேர்தலில், காசு பிரம்மானந்த ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்" என்றார்.

இதற்கு முன்பு பலமுறை கட்சித் தலைவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் வரலாற்றில் 5 முறை மட்டுமே போட்டியுடன், தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்துள்ளது. கடந்த 1939-ல் நடந்த தேர்தலில் மகாத்மா காந்தி, பி.சீதாராமய்யா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சுபாஷ் சந்திர போஸ் வெற்றி பெற்றார். 2000-ம் ஆண்டுநடந்த தேர்தலில் சோனியா காந்திக்கும், ஜிதேந்திர பிரசாதாவுக்குமிடையே போட்டி ஏற்பட்டது. இதில் சோனியா 7,400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜிதேந்திர பிரசாதா 94 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

கர்நாடகாவில் பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘‘காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் தங்கள் சொந்த செல்வாக்கில் போட்டியிடுகின்றனர். அவர்கள் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கப்படுகிறார்கள் என்றால்,அது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது’’ என்றார்.

இத்தேர்தலில் முன்னணியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “நான் வெற்றி பெற்றால், சோனியா காந்தி குடும்பத்தினர் என்னை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவார்கள் என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. இதுபோன்ற பொய்களைப் பரப்பபாஜக முயற்சிக்கிறது. நான்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், தேவைப்படும்போது சோனியா குடும்பத்தினரிடம் ஆலோசனை கோருவேன். ஏனென்றால்,அவர்கள் குடும்பம் நாட்டுக்கு பல தியாகங்களை செய்துள்ளது.

மேலும், கட்சியின் ஒவ்வொருநுணுக்கமும் அவர்களுக்குத் தெரியும். கூட்டுத் தலைமை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது. நான் வெற்றி பெற்றால்,கட்சியை வலுப்படுத்துவதற்கு, அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு தேவை” என்றார்.

தமிழகத்தில் 710 பேர் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு

தமிழகத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் 710 பேர் வாக்களிக்கின்றனர். இதற்காக, டெல்லியில் இருந்து 4 பிரத்யேக வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், வாக்குப் பதிவுக்குத் தேவையான பொருட்கள் ஆகியவை வாக்குப்பதிவு நடைபெறும் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

வாக்குச் சாவடிகளை அமைக்கும் பணிகளில் கட்சி நிர்வாகிகள் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். அனைத்து வாக்காளர்களுக்கும் க்யூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டது. இதை பிரத்யேக கருவியில் காண்பித்த பின்னரே, வாக்குச்சாவடிக்குள் நுழையமுடியும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா 5 வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அதிகாரிகளாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த நெய்யாற்றங்கரை சனல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலையே சென்னைக்கு வந்து, தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x