Published : 16 Oct 2022 10:12 PM
Last Updated : 16 Oct 2022 10:12 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, பாப்ஸ்கோ சார்பில் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி தீபாவளி சிறப்பு அங்காடியை திறந்து வைத்து 25 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏக்கள் ஏகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அங்காடியை திறந்து மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு சுமார் ரூ.11 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ரூ.12 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் இந்தாண்டு மிகவும் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது.
இந்த தொகுப்பு ரூ.800-க்கு வழங்கப்படுகிறது. பட்டாசு எம்ஆர்பி விலையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அரசு சார்பில் ரூ.3.5 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கான்பெட் நிறுவனம் மூலமும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பாப்ஸ்கோ, கான்பெட் நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு எளிமையாக பொருட்கள் கிடைப்பதுடன், விலையேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது.
தீபாவளியையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்’’ என்றார்.
அப்போது ஆளுநர் மக்கள் குறை கேட்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ‘‘எங்கள் அரசின் கடமை மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பது. அதனடிப்படையில் அரசு மக்களின் குறைகள் கேட்கப்பட்டு, தீர்க்கப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தார்.
இன்று திறக்கப்பட்டுள்ள பாப்ஸ்கோ அங்காடி வருகின்ற 24-ம் தேதி வரை 9 நாட்களுக்கும், திருக்கனூர் காந்திமதி திருமண மண்டபம், காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாளை தொடங்கி 24-ம் தேதி வரை 8 நாட்களுக்கும் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT