Published : 16 Oct 2022 04:31 PM
Last Updated : 16 Oct 2022 04:31 PM
போபால்: இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திமொழியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிமுகம் செய்துவைத்தார்.
போபாலில் எம்பிபிஎஸ் பாடப் புத்தக இந்திப்பதிப்பு வெளியீட்டு நிகழ்வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்படும் இந்நிகழ்ச்சி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு அமித்ஷா புத்தகங்களை அறிமுகப்படுத்தி பேசுகையில், ''பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம், மாணவர்களின் தாய்மொழிக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. இந்தியாவின் கல்வித் துறைக்கு மிக முக்கியமான நாள் என்பதால் இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்,'' என்றார்.
ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், ''ஆங்கிலம் தெரியாத குடும்பங்களிலிருந்து வருபவர்கள் எம்பிபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் பலமுறை படிப்பை விட்டு வெளியேறினர். அவர்கள் ஆங்கில வலையில் சிக்கியுள்ளனர். ஆனால் இந்த புத்தகங்கள் அவர்கள் கவலைகளைப்போக்கும். மருத்துவக் கல்லூரிகளில் சேரக்கூடிய ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் இன்று அமித் ஷா புதிய விடியலைக் கொண்டு வந்துள்ளார்,
நாங்கள் தயாரித்த (இந்தி மருத்துவக் கல்வி) புத்தகங்களை மற்ற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வோம். இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களையும் சந்தித்து பேசுவேன். எங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுப்போம், அவர்கள் (மற்ற மாநிலங்கள்) எதிலும் சிறப்பாக செயல்பட்டால், அவர்களிடமிருந்தும் நாங்கள் தேவையானதை எடுத்துக்கொள்வோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT