Published : 16 Oct 2022 02:36 PM
Last Updated : 16 Oct 2022 02:36 PM

அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வாஷிங்கடன்: அமலாக்கத் துறை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது போலி குற்றச்சாட்டு அது முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "அமலாக்கத்துறை முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறது. பொருளாதாரக் குற்றங்களைக் கையாளும் அமைப்பு அது. மத்திய அமைப்புகள் அதன் கடமைகளைச் செய்கின்றன. யாரையும் குறிவைத்து நடவடிக்கைகள் எடுப்பதில்லை. எந்த ஒரு விசாரணையிலும் எடுத்தவுடனேயே அமலாக்கத் துறை வருவதில்லை. ஒரு சோதனையில் கிடைக்கும் பணம், பொருள் ஆகியனவற்றின் தன்மை, அளவைப் பொருத்து அமலாக்கத் துறை தலையிடுகிறது. சில சோதனைகளில் பிடிபடும் பணத்தின் அளவை ஊடகங்களே காட்டுகின்றன. அப்படியிருக்கும் போது அமலாக்கத்துறை நடவடிகை எடுத்து தானே ஆக வேண்டும்" என்றார்.

ஜி 20 குழுவிற்கு இந்தியா தலைமை தாங்குவது தொடர்பான கேள்விக்கு, "நாங்கள் தலைமைப் பதவியைக் கோரும் இவ்வேளையில் உலக நாடுகள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. இதில் எப்படி நீந்தி முன்னேறுவது என்று நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

முன்னதாக அவர், "இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது என்றே சொல்வேன். ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

டாலர் வலுப்பெறும் சூழல் உலகளவில் மற்ற நாணயங்களை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உறுதியாக இருக்கிறது. அந்நிய செலாவணி சந்தையில் மற்ற எல்லா நாணயங்களையும் விட சந்தை மாற்றங்களை இந்திய ரூபாய் சிறப்பாக எதிர்கொண்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x