Published : 16 Oct 2022 07:09 AM
Last Updated : 16 Oct 2022 07:09 AM

தாய்மொழியில் சட்டப் படிப்பை கற்பிக்க வேண்டும் - சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முக்கிய வழக்குகள் அடங்கிய டிஜிட்டல் நூலகத்தை உள்ளூர் மொழிகளில் உருவாக்க வேண்டும் என்றும் சட்டப்படிப்பை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

குஜராத்தின் ஏக்தா நகரில் மாநில சட்ட அமைச்சர்கள், செயலாளர்களின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, அனைத்து மாநிலங்களின் சட்ட அமைச்சர்கள், செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:

கடந்த 8 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட பழைய சட்டங்களைமத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இந்தச் சட்டங்கள் அடிமைத்தன காலத்தை சேர்ந்தவை. சிலமாநிலங்களில் இன்னமும் அடிமைகால சட்டங்கள் நீடிக்கின்றன. இதுபோன்ற சட்டங்களை ஒழிக்க வேண்டும்.

நீதித் துறையில் தாமதமாக நீதிவழங்கப்படும் விவகாரம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதித் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நேரத்தில் மாற்று விவாத தீர்வு முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பரிசீலிக்கலாம். இந்த தீர்வு முறை கிராமங்களில் ஆண்டாண்டு காலமாக அமலில் இருக்கிறது.

சில நாடுகளில் சட்டம் இயற்றப்படும்போது, 2 விதமாக சட்டம் தயார் செய்யப்படுகிறது. முதலாவது சட்டத்தின் வரையறையில் தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்தி விரிவாக விளக்கி சட்டம் எழுதப்படுகிறது. இரண்டாவது மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான மொழியில் சட்டத்தை எழுதி வெளியிடுகின்றனர்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி இந்தியாவில் புதிய சட்டங்களை வரையறுக்கும்போது, சாமானிய மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் மொழியில் சட்டங்களை எழுத வேண்டும்.

நாட்டின் குடிமக்கள் சட்டத்தை முழுமையாக அறிந்து கொள்ள மொழி தடையாக இருக்கக்கூடாது. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் கவனம் செலுத்த வேண்டும். தாய்மொழியில் சட்டப் படிப்புகளை கற்பிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான வழக்குகள் அடங்கிய டிஜிட்டல் நூலகத்தை உள்ளூர் மொழியில் உருவாக்க வேண்டும். இது சாமானியர்களுக்கு சட்ட அறிவை அதிகரிக்கும். நாடு முழுவதும் இ-நீதிமன் றங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. கரோனா காலத்தில் காணொலி வாயிலாக விசாரணைகள் நடைபெற்றன. இது தவிர வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் திட்டமும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நீதித் துறையின் டிஜிட்டல்திட்டங்கள் மேலும் முடுக்கி விடப்படும்.

ஒரு தாய் குழந்தைகள்

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டத்தில் விசாரணைக் கைதிகள் பிரச்சினையை எழுப்பினேன். இந்த விவகாரத்தை இப்போதும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். விசாரணை கைதிகள் விவகாரத்தில் மாநில அரசுகள் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்.

அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றம் ஆகியவை ஒரு தாயின் குழந்தைகள். செயல்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தை நோக்கத்தைநிறைவேற்றும் வகையில் 3 அமைப்புகளும் இயங்குகின்றன. இந்த 3 அமைப்புகளின் செயல்பாட்டில் வாக்குவாதத்துக்கோ, போட்டிக்கோ இடமில்லை. 3 அமைப்புகளும் இணைந்து பாரத தாய்க்கு சேவையாற்ற வேண்டும். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x