Published : 15 Oct 2022 05:51 AM
Last Updated : 15 Oct 2022 05:51 AM

கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை ‘கார்பன் டேட்டிங்’ செய்ய அனுமதி மறுப்பு

லக்னோ: கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தில் கார்பன் டேட்டிங் செய்ய நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி பழமையான கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர்கள் காலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கியான்வாபி மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2021 ஆகஸ்ட் 18-ம்தேதி 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கை கடந்த மே 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் அமைந்துள்ள இடத்தை சீல் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணைக்கு தகுதியானதா என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 12-ம் தேதி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இந்த சூழலில் கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் உண்மையான வயதை கண்டறிய ‘கார்பன் டேட்டிங்' ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் கடந்தசெப்டம்பர் 22-ம் தேதி முறையிடப்பட்டது.

வழக்கை தாக்கல் செய்த 5 இந்து பெண்களில் ஒருவர் மட்டும் ‘கார்பன் டேட்டிங்' ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியும் ‘கார்பன் டேட்டிங்' ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆதாரம் இல்லை

இந்நிலையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது கார்பன் டேட்டிங் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. மேலும், இந்தமனுவையும் வாரணாசி நீதிமன்றம்தடை செய்துள்ளது. அதுமட்டுமல் லாமல் கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவி யல்பூர்வ ஆதாரமில்லை என்றும் வாரணாசி நீதிமன்றம் கூறியுள்ளது.

‘கார்பன் டேட்டிங்' முறை

உயிரினங்களில் கார்பன் உள்ளது. இந்த கார்பனில், கரிமம் 14 எனப்படும் ஐசோடோப் உள்ளது. இதில் இருந்து ‘டேட்டிங்' எனப்படும் காலக்கணிப்பை மேற்கொள்ள முடியும்.

கணிக்க முடியாது

அதாவது ஓர் உயிரினம் காலப்போக்கில் கரிம பொருளாக சிதைகிறது. இதன்படி விலங்கினம், தாவரம் மடிந்த பிறகு கரிம விகித மாற்றத்தை வைத்து அவை எந்த காலத்தை சேர்ந்தது என்பதை கணக்கிட முடியும். இதுவே ‘கார்பன் டேட்டிங்' என்றழைக்கப்படுகிறது.

எனினும் பாறை, உலோகங்கள் போன்ற உயிரற்ற பொருட்களின் வயதை ‘கார்பன் டேட்டிங்' மூலம் கணிக்க முடியாது. இதன்படி கியான்வாபி சிவலிங்கத்தை நேரடியாக ‘கார்பன் டேட்டிங்' செய்ய முடியாது. எனினும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தபோது பூஜிக்கப்பட்ட தானியங்கள், மரத்துண்டுகள், உடைகள், கயிறுகள் ஆகியவற்றின் மூலம் ‘கார்பன் டேட்டிங்' செய்ய முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x