Published : 14 Oct 2022 05:11 PM
Last Updated : 14 Oct 2022 05:11 PM
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதேபோல், பாஜக ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
எனவே, இவ்விரு மாநிலங்களின் தேர்தல் அட்டவணையும் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இன்று இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படவில்லை.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டார். 68 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த அவர், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி அக்டோபர் 25 என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 29 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் மக்களின் பங்களிப்பு அதிக அளவில் இருப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள ராஜிவ் குமார், தேர்தலில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் அலுவலர்கள் அவர்களின் வீடுகளுக்கே செல்வார்கள் என தெரிவித்துள்ள ராஜிவ் குமார், வாக்கு பதிவு வீடியோவாக பதிவு செய்யப்படும் என கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2017 பொதுத் தேர்தலில் பாஜக 44 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது பாஜக 45 எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் 22 எம்எல்ஏக்களையும் சிபிஎம் ஒரு எம்எல்ஏவையும் கொண்டுள்ளன.
இம்முறையும் பாஜக - காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்றாலும், ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை கைப்பற்றும் என கணிப்புகள் கூறுகின்றன.
ABP நியூஸ் - சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்த தேர்தலில் பாஜக 46.80% வாக்குகளைப் பெறும் என்றும், காங்கிரஸ் 32.30% வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 17.40% வாக்குகளைப் பெறும் என்றும் அது தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...