Published : 14 Oct 2022 03:37 PM
Last Updated : 14 Oct 2022 03:37 PM
ஹைதராபாத்: கர்நாடக மாநிலம் லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி சரணரு மீது மேலும் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவின் சித்ரதுர்காவில் பிரபலமான முருகமடம் உள்ளது. இதன் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக 10-ஆம் வகுப்பு பயிலும் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், அந்த மாணவிகள் மைசூரில் உள்ள சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தைக் கூறியுள்ளனர். இந்தப் புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, சிவமூர்த்தி சரணகுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சரணரு மீது மேலும் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளனர். ஜனவரி 2019 முதல் ஜூன் 2022 வரை சரணரு தங்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த 4 மாணவிகளும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிவமூர்த்தி சரணரு உட்பட 6 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT