Published : 14 Oct 2022 07:13 AM
Last Updated : 14 Oct 2022 07:13 AM
புதுடெல்லி: அறக்கட்டளை பெயரில் மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட பெண் பத்திரிகையாளர் ராணா அயூப் மீது, அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1.77 கோடி முடக்கப்பட்டது.
உ.பி.யை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்.இவர் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, நிவாரணப் பணிகளுக்கு மக்களிடம் இருந்து ‘கேட்டோ’ என்ற ஆன்லைன் தளம் மூலம் நிதி திரட்டினார். ஆனால், இந்த நிதியை நிவாரணப் பணிகளுக்கு இவர் முழுமையாக பயன்படுத்தவில்லை. பி.எம். கேர்ஸ் நிதி மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.74.50 லட்சம் அனுப்பி உள்ளார். ரூ.50 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்பு தொகையாக மாற்றியுள்ளார். வங்கியில் தனியாக ஒரு நடப்பு கணக்கை தொடங்கி, அதில் அறக்கட்டளைக்கு வசூலித்த நிதியை மாற்றியுள்ளார். 3 வங்கிக் கணக்குகளில் இவர் அறக்கட்டளை பணத்தை சேமித்து வைத்துள்ளார்.
இவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விகாஸ் சங்கிரித்தயன் என்பவர் காஜியாபாத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலையத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராணா அயூப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் மீது இந்திய தண்டனை சட்டம், ஐ.டி. சட்டம், கருப்பு பணம் சட்டம் ஆகியவற்றின் பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. இவரது 3 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.1,77,27,704 மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ.50 லட்சத்துக்கு கிடைத்த வட்டித் தொகை ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மும்பையில் பிறந்த ராணா அயூப், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார். குஜராத் ஃபைல்ஸ் என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். பிரபல புலனாய்வு இதழான தெகல்ஹாவிலும் பணியாற்றி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT