Published : 13 Oct 2022 07:29 PM
Last Updated : 13 Oct 2022 07:29 PM
அஸ்தானா (கஜகஸ்தான்): இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கஜகஸ்தானில் நடைபெற்ற சிஐசிஏ மாநாட்டில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி வலியுறுத்தி உள்ளார்.
ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிஐசிஏ அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 27 நாடுகள் உறுப்பினராக உள்ளன. 28வது நாடாக குவைத் இதில் இந்த ஆண்டு இணைந்துள்ளது.
இந்த அமைப்பின் 6வது சர்வதேச மாநாடு கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் இன்று தொடங்கியது. மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மாநாட்டில் பேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, இந்தியாவுக்கு எதிரான தவறான மற்றும் மலிவான பிரச்சாரத்திற்கு சிஐசிஏ மாநாட்டை பாகிஸ்தான் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொள்வது துரதிருஷ்டவசமானது என குறிப்பிட்ட அவர், இது மாநாட்டின் நோக்கத்தை திசை திருப்புவதாக உள்ளது என கூறினார். ஜம்மு காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என தெரிவித்த மீனாட்சி லேகி, இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்றார்.
உலகில் தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது என குற்றம் சாட்டிய மீனாட்சி லேகி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ அந்த நாடு காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மனித வள மேம்பாட்டுக்குத் தேவையான நிதியை பாகிஸ்தான் ஒதுக்குவதில்லை என்றும் மாறாக, தீவிரவாத கட்டமைப்புகளை உருவாக்கவும், வலுப்படுத்தவுமே நிதி ஒதுக்குவதாகவும் மீனாட்சி லேகி கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை மூட வேண்டும் என்றும் மீனாட்சி லேகி வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் அந்நாடு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய இந்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி, சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் இந்தியாவிடம் இருந்து ஆக்கிரமித்துள்ள அந்த பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT