Published : 13 Oct 2022 11:37 AM
Last Updated : 13 Oct 2022 11:37 AM
புதுடெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், மற்றொரு நீதிபதி சுஷந்த் துலியா கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணை வேறு ஒரு அமர்வின் விசாரணைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதிகள் கூறியது என்ன? "வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதால் தனிநபர் சுதந்திரமோ இஸ்லாமிய மாணவிகளின் உரிமையோ பறிபோகாது" என்று நீதிபதி ஹேமந்த் குப்தா கூறினார். அதேவேளையில் நீதிபதி சுஷாந்த் துலியா கூறும்போது, "ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறையா இல்லையா என்று கர்நாடக உயர் நீதிமன்றம் முடிவு செய்ததே தவறு. உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பிஜோ இமானுவேல் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதி துலியா, ஒரு பழக்கம் நடமுறையில் உள்ளதா அது நிறுவப்பட்டதா, அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை மட்டுமே நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஹிஜாப் அணிதல் என்பது இந்த மூன்று புள்ளிகளையும் உள்ளடக்கியுள்ளது" என்றார்.
பெண் குழந்தைகளின் கல்வி முக்கியம்: நீதிபதி துலியா மேலும் கூறுகையில், "பெண் குழந்தைகளின் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அந்த இலக்கில் எக்காரணம் கொண்டும் தடை வரக்கூடாது. இந்தியாவின் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த சமூகம் இனியும் பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறோமா என்பதை நாம் யோசிக்க வேண்டும். என் சக நீதிபதி ஹேமந்த் குப்தா மீது நான் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன். இருப்பினும் இந்த வழக்கில் அவர் தீர்ப்பில் இருந்து நான் முரண்படுகிறேன்" என்றார். நீதிபதி ஹேமந்த் குப்தா வரும் 16 ஆம் தேதி (அக்.16) ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் வழக்கில் இருநீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலனைக்கு வழக்கு பரிந்ந்துரைக்கப்பட்டது. இனி தலைமை நீதிபதி இந்த வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...