Published : 13 Oct 2022 10:37 AM
Last Updated : 13 Oct 2022 10:37 AM
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பற்றி பேசி வரும் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மம்தா பானர்ஜி, கேசிஆர், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியேரை ஏன் அழைக்கவில்லை என்று பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜத தலைவர் சுஷில் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த யாத்திரையின் நோக்கம் காங்கிரஸ் கட்சியை ஒற்றுமை படுத்துவதுதானே தவிர, இந்தியாவை ஒற்றுமைப் படுத்துவது இல்லை. இந்தியா ஏற்கெனவே ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என்றார்.
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அது ஒற்றுமை குறித்து வலுவான தகவல்களை எடுத்து கூறுவதாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, பிஹார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி கூறுகையில், "இந்திய ஒற்றுமை யாத்திரையில் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொள்வதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. மாறாக மம்தா பானர்ஜி, கேசிஆர், அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பற்றி பேசும் காங்கிரஸ், அவர்கள் கூட்டணி வைத்திருக்கும் கூட்டணி கட்சிகளிடமே ஆதரவு கேட்கின்றன. திக்விஜய் சிங் பிஹாரில் நடக்கும் யாத்திரையில் பங்கேற்குமாறு லாலுவை அழைக்கலாம். நிதிஷ் குமார் வியாழக்கிழமை கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் எல்லாம் எந்த மாற்றமும் நடந்து விடாது.
இந்திய ஒற்றுமை யாத்திரை மக்களிடமிருந்து அமோக ஆதரவை பெற்றுள்ளதாகக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. அப்படியானால் ராகுல் காந்தியை குஜராத், இமாச்சலப்பிரதேசம் போன்ற பாஜக வலுவாக உள்ள மாநிலங்களுக்கு வரச்சொல்லுங்கள். இந்திய ஒற்றுமை யாத்திரையின் முக்கிய நோக்கம் காங்ரகிஸ் கட்சியை ஒற்றுமை படுத்துவதே. இந்தியாவை ஒற்றுமை படுத்துவது இல்லை. இந்தியா ஏற்கெனவே ஒற்றுமையாகத் தான் இருக்கிறது. இவ்வாறு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...