Published : 13 Oct 2022 06:50 AM
Last Updated : 13 Oct 2022 06:50 AM
புதுடெல்லி: நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை செல்லாததாக அறிவிக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்தும், பணமதிப்பிழப்பு சட்டத்துக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டே வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது இது குறித்து 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பரிந்துரைத்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்தனா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி, பணமதிப்பிழப்பு சட்டத்துக்கு எதிராக சரியான முறையில் வழக்கு தொடரவில்லையென்றால், இந்த விஷயம் பயனற்ற நடவடிக்கையாக இருக்கும்’’ என்றார். மனுதாரர் விவேக் நாராயண் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் ஆஜரானார். மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘‘இந்த விவகாரம் பயனற்ற நடவடிக்கை அல்ல, இது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். இதுபோன்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தனியான நாடாளுமன்ற சட்டம் தேவைப்படுகிறது’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
அரசின் கொள்கை முடிவுகளில் நீதித்துறை ஆய்வு குறித்த லட்சுமண் ரேகை பற்றி உச்ச நீதிமன்றத்துக்கு நன்கு தெரியும். கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு முடிவுகள் பயனற்ற நடவடிக்கையா என்பது குறித்து நாங்கள் ஆராய வேண்டும்.
அரசியல் சாசன அமர்வு முன் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டால், அதற்கு பதில் அளிப்பது எங்கள் கடமை. இதற்கு வழக்கறிஞர்கள் கூறுவதை கேட்டு நாங்கள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT