Published : 13 Oct 2022 03:04 AM
Last Updated : 13 Oct 2022 03:04 AM
டெல்லி: 2024ல் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக இருவரும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் கட்சியினர் மத்தியில் மல்லிகார்ஜுன் கார்கே பிரச்சாரம் செய்த பிறகு 2024 ஆம் ஆண்டிற்கான காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வியை எதிர்கொண்டார். அடுத்த காங்கிரஸ் தலைவராக தேர்தெடுக்கும் பட்சத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக நீங்கள் நிற்பீர்களா என்று மல்லிகார்ஜுன் கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் கொடுத்த கார்கே, "அதற்கு பதில் சொல்வதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. முதலில் இந்தத் தேர்தலைச் சமாளிப்போம். ஆடு பக்ரீத்துக்கு பிழைத்தால், அது முஹர்ரத்தின் போது நடனமாடும் என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் உள்ளது இது. முதலில் இந்தத் தேர்தல் முடியட்டும். நான் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்கிறேன். அதன்பிறகு இதைப் பற்றி பார்க்கலாம்" என்று சமாளித்தார்.
80 வயதான கார்கே காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது. காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான நபராக அறியப்படும் இவர், தலைவர் தேர்தல் ரேஸில் மிக தாமதமாகவே நுழைந்தார். காந்தி குடும்பத்தின் வற்புறுத்தலின்பேரிலே இவர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால், "காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிக்கு தலைமையேற்க தயாராக இல்லை என்பதால் தலைவர் தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டேன். சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் கட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்" என்று சில நாட்கள் முன்னதாக கார்கே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT