Published : 12 Oct 2022 07:33 PM Last Updated : 12 Oct 2022 07:33 PM
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய அமைச்சரவைக்கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:
அமைச்சரவைக் கூட்டத்தில் ரெயில்வேதுறைக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இன்றைய அமைச்சரவை, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. இதன்மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும். இது 78 நாட்களுக்கு போனஸாகவும், அதிகபட்ச வரம்பாக ரூ.17,951 ஆகவும் இருக்கும்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமர் மேம்பாட்டு முயற்சி' (PM-DevINE) எனும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது 2022-23 முதல் 2025-26 வரையிலான அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு 15வது நிதி ஆணையத்தின் திட்டமாகும்.
பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ஒருமுறை மாநியமாக ரூ. 22,000 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் எல்பிஜி எரிவாயு விலை அதிகரித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வின் சுமை சாமானிய மக்கள் மீது விழக்கூடாது என்பதற்காக இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
வரும் 22ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
WRITE A COMMENT