Published : 12 Oct 2022 10:14 AM
Last Updated : 12 Oct 2022 10:14 AM

பாஜக vs திரிணமூல் காங். | பாஜகவில் இணையாததால் கங்குலிக்கு பிசிசிஐ பதவி மறுப்பா? - வலுக்கும் சர்ச்சை

ஜெய் ஷா, சவுரவ் கங்குலி | கோப்புப் படம்

கொல்கத்தா: பிசிசிஐ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி மீண்டும் சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்படாதது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கருத்து மோதல் வலுத்துள்ளது. ‘கடந்த ஆண்டு மேற்கு வங்கத் தேர்தலின்போது, கங்குலி பாஜகவில் இணைவார் என்று அக்கட்சி ஒரு செய்தியை மக்கள் மத்தியில் பரப்பியது. அதற்கு மாறாக கங்குலி பாஜகவில் இணையாததால் அவர் இப்போது குறிவைக்கப்பட்டுள்ளார்’ என்று மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளையில், ‘சவுரவ் கங்குலியை ஒருபோதும் தங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்பாத திரிணமூல் காங்கிரஸ், தற்போது பிசிசிஐ-யின் மாற்றம் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது’ என்று அக்கட்சிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி சாந்தனு சென், "அரசியல் பழிவாங்கலுக்கு மற்றுமொரு உதாரணம். அமித் ஷாவின் மகனுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பு, கங்குலிக்கு ஏன் வழங்கப்படவில்லை? அவர் மம்தா பானர்ஜியின் மாநிலத்தை சேர்ந்தவர் அல்லது பாஜகவில் இணையவில்லை என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டதா? நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் தாதா" என்று தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் கட்சி நேரடியாக எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால், தேர்தலுக்கு முன்பும், பின்பும் இதுபோன்ற பிரசாரங்களை பாஜக செய்யும் என்பதால், கங்குலியின் பதவி விவகாரத்தில் அரசியல் இருக்கிறது என்ற ஊகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டியது பாஜகவின் பொறுப்பு. இது சவுரவ் கங்குலியை பாஜக அவமானப்படுத்தியதாகவே தெரிகிறது. இந்த நேரத்தில் கங்குலியே இதுகுறித்து விளக்கம் அளிக்க மிகச் சரியான நபர் என நான் கருதுகிறேன். இதுகுறித்து அவருக்கு எதாவது அரசியல் கருத்துகள் இருந்தாலும், அதனை அவர் எந்த அளவுக்கு வெளிப்படுத்துவார் என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த மே மாதம் கங்குலியின் வீட்டிற்கு பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் இரவு விருந்துக்குச் சென்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ள பாஜகவின் தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், "பாஜக எப்போது சவுரவ் கங்குலியைக் கட்சியில் இணைக்க முயன்றது என்று தெரியவில்லை. கங்குலி ஒரு கிரிக்கெட் ஜாம்பவான். பிசிசிஐ-யில் தற்போது நடந்துள்ள மாற்றம் குறித்து சிலர் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். கங்குலியை பிசிசிஐ-யின் தலைவராக்கியதில் அவர்களுக்கு ஏதாவது பங்கு உண்டா? எல்லா விஷயங்களையும் அரசியலாக்குவதை திரிணமூல் காங்கிரஸ் நிறுத்திக் கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சையின் பின்புலம்: பிசிசிஐ-யின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி, பிசிசிஐ-யின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதேவேளையில், ஜெய் ஷா 2-வது முறையாக பிசிசிஐ செயலாளராக தொடர உள்ளார். ஜெய் ஷாவுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் கங்குலிக்கும் அளிக்கப்படாததுதான் இப்போது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x