Published : 12 Oct 2022 05:52 AM
Last Updated : 12 Oct 2022 05:52 AM
ஹைதராபாத்: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு தொழில்நுட்பமும் திறமையும் இரு தூண்களாக விளங்குவதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 2-வது உலக புவிசார் தகவல் மாநாடு-2022 ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:
உலக அளவில் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்துக்கு உறுதுணையான இரண்டு தூண்களாக விளங்கி வருவது தொழில்நுட்பம், திறமை மட்டுமே. கடைக்கோடியில் உள்ள கடைசி மனிதருக்கும் அதிகாரமளிக்கும் இலக்கை நோக்கி நாடு வீறு நடைபோட்டு வருகிறது. அந்த வகையில், வங்கிக்கணக்கு இல்லாத 45 கோடி பேருக்கு வங்கிச் சேவை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம். அதேபோன்று, காப்பீடு இல்லாத 13.5 கோடி பேருக்கு காப்பீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பிரான்ஸ் மக்கள்தொகையைவிட இரு மடங்குஅதிகம். இதுதவிர, 11 கோடி குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளும், 6 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. வளர்ச்சி நடவடிக்கைகளில் யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சிறிய அளவிலான சாலையோர வர்த்தகர்கள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனையில் இணைந்து பயனடைந்து வருகின்றனர். இந்தியா இளைஞர் சக்தியைஅதிகம் கொண்ட நாடு. எனவேஅவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தாகம் அதிகம் உள்ளது.அதன் விளைவாகவே, உலகளவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எனது குடும்பத்தினர் உதவி கோரியதில்லை..
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:
நீண்ட காலம் குஜராத் முதல்வராக இருந்துள்ளேன். இரண்டாவது முறையாக பிரதமராகி உள்ளேன். இந்த நீண்ட நெடிய காலகட்டத்தில் எனது பொறுப்புகளை நேர்மறையாக நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு அளித்த எனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். ஏனெனில், அவர்கள் யாரும் உதவி என்று கோரி இதுவரை என்னிடம் வந்ததில்லை. அதேபோல எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இதுவரை என்னிடம் எந்தவிதமான சகாயத்தையும் கேட்டதில்லை. எனது குடும்பத்தினர் என்னை விட்டு விலகி இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். அதன் விளைவாகத்தான், மற்றவர்களுக்கு தடையாக ஒருபோதும் எனது சமூகம் இருந்ததில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT