Published : 11 Oct 2022 07:31 AM
Last Updated : 11 Oct 2022 07:31 AM
புதுடெல்லி: சுதந்திரத்துக்கு பிறகு நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அவரது பாதையில் பல தலைவர்கள் உருவானார்கள். அவர்களில் உ.பி.யில் இந்திய சோஷலிச கட்சி பெயரில் அரசியலில் ஈடுபட்ட ராம் மனோகர் லோகியாவும் ஒருவர். இவரது செயல்பாடுகள் மற்றும் சமூகநீதிக் கருத்துகளால் கவரப்பட்டு அரசியலில் குதித்தவர்தான் முலாயம் சிங் யாதவ்.
உ.பி.யின் எட்டாவா மாவட்டத்தின் சைஃபை எனும் கிராமத்தில் சுதார்சிங், மூர்த்தி தேவி எனும் விவசாயத் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக 1939-ம் ஆண்டு நவம்பர் 22-ல் பிறந்தார் முலாயம். 4 சகோதரர்கள், ஒரு சகோதரி என 5 பேர் இவரது உடன் பிறந்தவர்கள். மெயின்புரியின் ஜெயின் கல்லூரியில் எம்.ஏ., பி.டி. வரை படித்த முலாயம், பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ராம் மனோகர் லோகியா நடத்தி வந்த ‘சவுகம்பா’ (நான்கு தூண்கள்) எனும் இந்தி வார இதழ் மற்றும் ‘மேன்கைண்ட்’ எனும் ஆங்கில மாத இதழை முலாயம் தொடர்ந்து படித்து வந்தார். இதில் லோகியாவின் கருத்துகளால் கவரப்பட்டு அரசியலில் குதித்தார்.
1966-ல் விலைவாசி உயர்வுக்கு எதிராக உ.பி.யில் ராம் மனோகர் லோகியா நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார் முலாயம். அதே வருடம் ஜூலை 12-ல் முதல் முறையாக சிறை சென்றார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் உ.பி. சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. அப்போது இந்திய சோஷலிச கட்சியின் கோட்டையாக இருந்த ஏட்டா பகுதியின், ஜஸ்வந்த் நகர் பேரவை தொகுதியில் போட்டியிட முலாயம் சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. அக்கட்சியின் உ.பி. மாநில தலைவராக இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலியின் சிபாரிசின் பேரில் அளிக்கப்பட்டது. முலாயம் சிங் இத்தொகுதியில் வென்று இந்தியாவின் இளம் எம்எல்ஏக்களில் ஒருவரானார். அப்போது முதல் அவரை உபிவாசிகள், ‘நேதாஜி’ என அன்புடன் அழைக்கத் தொடங்கினர்.
1977-ல் உ.பி. பேரவை தேர்தலில் 3-வது முறை எம்எல்ஏவான முலாயம் கூட்டுறவுத் துறை அமைச்சரானார்.அதன் பிறகு, மிசா சட்டத்துக்கு எதிராக உருவான ஜனதா கட்சியின் எம்எல்ஏ.வாகவும் முலாயம் சிங் இருந்தார். ஜன சங்கம் இரண்டான பிறகு சரண்சிங் தலைமையில் உருவான லோக் தளத்தின் உ.பி. மாநிலத் தலைவராக சில மாதங்கள் இருந்தார் முலாயம். சரண்சிங் மறைவுக்கு பிறகு லோக் தளம் கட்சி, லோக்தளம்-ஏ (அஜீத் சிங்), லோக் தளம்-பி (பகுகுணா) என இரண்டானது. இதில் பகுகுணா கட்சியின் உ.பி. மாநிலத் தலைவரானார் முலாயம். பிறகு பகுகுணாவும் இறந்து போக, இந்த சமயத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய வி.பி.சிங், ஜனதா தளம் கட்சியை உருவாக்கி அதில் லோக்தளம் கட்சிகளையும் இணைந்தார்.
இதனால், வி.பி.சிங்கின் ஆதரவாளரான முலாயம், ஜனதா தளத்தின் உ.பி. மாநிலத் தலைவராக தொடர, அதன் சார்பில் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிறகு, 1989-ல் அதே கட்சி சார்பில் உ.பி.யில் முதல் முறையாக முதல்வராகும் வாய்ப்பும் கிடைத்தது. மத்தியில் தேசிய முன்னணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமர் ஆவதற்கு முக்கிய ஆதரவு தந்த பாஜக, உ.பி.யில் முலாயம் சிங்கிற்கு ஆதரவு அளித்ததால் அவர் முதல்வரானார். அப்போது, உ.பி.யில் மிகப்பெரிய சக்தியாக உருவாகிவிட்ட விஎச்பி, 1990-ம் ஆண்டு அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 20-ல் கரசேவை தொடங்கி பாபர் மசூதியை உடைக்க முயன்றது. இதைக் கடுமையாக எதிர்த்த முலாயம்சிங், கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதைத் தடுத்து நிறுத்தினார். இதில் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உ.பி.யில் முலாயமிற்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இருப்பினும், முலாயமின் ஆட்சியில் அயோத்தி துப்பாக்கிச்சூடு சம்பவம் அவருக்கு முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுத் தந்தது. இச்சம்பவத்துக்கு பிறகு முலாயம் ‘மவுலானா’ என்று அழைக்கப்பட்டார்.
லக்னோவில் 1992, அக்டோபர் 4-ல் ‘சமாஜ்வாதி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அடுத்து வந்த தேர்தலில் அவருக்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்க, இரண்டாவது முறையாக முதல்வரானார் முலாயம் சிங். ஆனால், இரண்டு வருடம் மட்டுமே நீடித்த இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் புகார் எழுப்பின. அப்போது முதல்வராகும் ஆசையில் முலாயமிற்கு அளித்த ஆதரவை மாயாவதி வாபஸ் பெற்றார். வெறும் இரண்டு வருடங்களில் முதல்வர் பதவியை இழந்த முலாயம், 1996-ல் தேசிய அரசியலில் கால் பதித்தார். அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, தேவகவுடா அமைச்சரவையில் முதன்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சரானார். மாயாவதியும் முலாயம் சிங்கும் உ.பி.யின் பிரதான தலைவர்களாகி அங்கு மாறி, மாறி ஆட்சி செய்தனர்.
இந்தநிலை 2017-ல் பாஜக ஆட்சிக்கு வரும் வரை நீடித்தது. முலாயமும் எம்.பி. அல்லது எம்எல்ஏவாக மாறி, மாறி பதவி வகித்தார். உ.பி.யின் வெவ்வேறு தொகுதிகளில் 10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். தற்போது அவர் உ.பி. மெயின்புரி தொகுதி எம்.பி.யாக இருந்தார். உ.பி.யில் குடும்ப அரசியலை வளர்த்ததாக முலாயம் மீது புகார் உள்ளது. அவரது, மகன் அகிலேஷ்சிங் யாதவ் 2012-ல் உ.பி. முதல்வர் ஆனார். அவரே 2017 முதல் சமாஜ்வாதி தலைவராக உள்ளார். முலாயமின் ஒன்றுவிட்ட சகோதரர் ராம் கோபால் யாதவ், கட்சி தேசியப் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். மற்றொரு சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ், சமாஜ்வாதி உ.பி. மாநிலத் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தற்போது தனிக்கட்சி நடத்தி வருகிறார். இன்னொரு சகோதரரின் மகன் தர்மேந்தர் யாதவ், அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் மக்களவையின் முன்னாள் எம்.பி.க்கள். முலாயமின் 2-வது மனைவியின் மருமகள் அபர்ணா யாதவ், கடந்த மார்ச்சில் சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவில் இணைந்தார்.
உ.பி.யில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா
அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதாவுக்கு முலாயம் சிங் யாதவுடன் நல்ல நட்பு இருந்தது. கடந்த 2007-ல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக பல கட்சிகள் தேசிய அளவில் மூன்றாவது அணியாகத் திரண்டன. இதன் இரண்டாவது கூட்டம் மற்றும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் அலகாபாத் நகரில் கடந்த 2007, ஏப்ரல் 23-ல் நடைபெற்றது. இங்கு முலாயம் தனது சமாஜ்வாதி கட்சிக்காக, தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவை முக்கியத் தலைவராக பிரச்சாரம் செய்ய வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா இந்தியில் தவறு எதுவும் இன்றி தனி பாணியில் பேசினார். அவரது பேச்சை முலாயம் சிங்குடன் உ.பி.வாசிகளும் கைத்தட்டி ஆரவாரத்துடன் ரசித்தனர். முழுக்க, முழுக்க காங்கிரஸை குறிவைத்து அவர் பேசியது பலத்த வரவேற்பை பெற்றது. மத்திய அரசு தரும் நிதிக்கு உ.பி. முதல்வராக இருந்த முலாயம் சிங் கணக்கு காட்ட வேண்டும் என அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள், உ.பி.யில் பிரச்சாரம் செய்தனர்.
அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஜெயலலிதா, “மத்திய அரசு தரும் நிதி மாநில அரசுகளுக்கு ஒன்றும் பிச்சையாகத் தரவில்லை. அது மக்களின் வரிப்பணம் அதை வாங்குவது மாநில அரசுகளின் உரிமை. சோனியாவை நான் கேட்கிறேன், இதே மக்கள் பணத்தை வெளிநாட்டு வங்கியில் போட்டு வைத்திருக்கும் உங்கள் உறவினர் குவாத்ரோச்சியிடம் கணக்கு கேட்பீர்களா? அவரை ஏன் இன்னும் கைது செய்து இந்தியா கொண்டு வரவில்லை” என்று முழங்கினார். இதைக்கேட்டு மேடையின் அருகில் கீழே அமர்ந்திருந்த சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகிகள், ‘காங்கிரஸுக்கு இப்படி ஒரு பதிலை முலாயம் சிங் கூட தந்ததில்லை’ என்று ஆச்சரியப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT