Published : 19 Nov 2016 05:21 PM
Last Updated : 19 Nov 2016 05:21 PM
ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் இன்னும் செயல்படாமலேயே இருக்கின்றன என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில், நாடு முழுவதும் சனிக்கிழமை வழக்கமான வேலை நேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும். இந்த நாளில் மூத்த குடிமக்களுக்கு மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும். வேறு யாருக்கும் பழைய நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படாது. வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிதம்பரம், ''நம்முடைய பணத்தை, நம் வங்கிகளில் இருந்து எடுக்க நாம் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை, ஏன் ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் இன்னும் செயல்படாமலேயே இருக்கின்றன?'' என்று தலைமைக் கணக்காளர் முகுல் ரோஹத்கியை நோக்கிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முன்னதாக முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத்திடம், ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு இல்லையெனவும், 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஏடிஎம்களில் புது 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்பும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உணர்வும் அக்கறையும் இல்லாத அரசாங்கம்
ரூபாய் நோட்டு மாற்றத்தால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துப் பதிவிட்ட காங்கிரஸ் ஊடகத்துறை பொறுப்பாளர் ரன்தீப் சர்ஜேவாலா, ''உணர்வும் அக்கறையும் அற்ற அரசாங்கம் கொண்டு வந்த ரூபாய் நோட்டு உத்தியால்தான் கோதுமை விதைப்பும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரூபாய் நோட்டு விவகாரம் 370 கூட்டுறவு வங்கிகளையும், 93,000 விவசாயக் கடன் வழங்கு வங்கிகளையும் பாதித்திருக்கிறது. இது கிராமப்புற பொருளாதாரத்தையே சிதைத்துள்ளது'' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT