Published : 10 Oct 2022 12:56 PM
Last Updated : 10 Oct 2022 12:56 PM
புதுடெல்லி: "என்னை ராஜினாமா செய்யச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அந்த கூட்டம் பற்றி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாது" என்று ராஜினாமா செய்துள்ள அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி சமூக நலத் துறை ராஜேந்திர பால் கவுதம், கடந்த 5-ம் தேதி டெல்லியி நடைபெற்ற அசோக விஜயதசமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினர். அவர்கள் ‘‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை வழிபட மாட்டேன்’’ என்று உறுதிமொழி ஏற்றனர்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமை கடுமையாக விமர்சித்த பாஜக அவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார் அதில், ராஜினாமா செய்யச்சொல்லி என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நான் என்னுடைய சொந்த விருப்பத்திலேயே பதவி விலகியுள்ளேன்.
மக்கள் கொல்லப்படுவது, பெண்கள் தாக்கப்படுவது, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிப்பது வேதனை தருவதாக இருக்கிறது. பாஜக இவை பற்றி எல்லாம் பேசாமல். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியை வைத்து அரசியல் செய்கிறது.
நான் இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவாலிடம் எதுவும் பேசவில்லை. அவருக்கு அந்த நிகழ்ச்சி பற்றி கூட தெரியாது. அது ஒரு சமூக, மதம் சார்ந்த நிகழ்ச்சி அரசியல் நிகழ்ச்சி இல்லை. பி.ஆர். அம்பேத்கர் மக்கள் புத்த மதம் தழுவும் போது எடுத்துக்கொள்வதுற்கு 22 உறுதி மொழிகளைக் கொடுத்துள்ளார். கடந்த 1956 ம் ஆண்டு முதல் அது போன்ற நிகழ்ச்சிகளில் அவை மீண்டும் மீண்டும் ஏற்கப்படுகின்றன. அவை மனிதாபிமானத்திற்கான உறுதி மொழிகள் மட்டுமே. அதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. நரேந்திர மோடி அரசு கூட அந்த உறுதி மொழிகளை பதிப்பித்து இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் நான் தனிமனிதனாக தான் கலந்து கொண்டேன். ஆம் ஆத்மி அரசின் அமைச்சராக இல்லை. பாஜகவால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதற்காக இதில் முதல்வரையும் கட்சியையும் ஏன் இழுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து, இந்து கடவுள்களை விமர்சித்துள்ள அமைச்சரை ஆம் ஆத்மி அரசு பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியிருத்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பேரணி நடைபெற இருந்த நிலையில் பாஜகவினர் கேஜ்ரிவாலுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். பேரணி தொடங்குவதற்கு முன்பாக வடோதராவில் ஆம் ஆத்மி கட்சியினரால் அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. டெல்லி, பஞ்சாப்பைத் தொடர்ந்து குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் இந்த செயல் கட்சியையும், அரவிந்த் கேஜ்ரிவாலையும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டுவிட்டது என்று கூறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT