Published : 10 Oct 2022 11:37 AM
Last Updated : 10 Oct 2022 11:37 AM
புதுடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் ஐ.நா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டும் எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தனது 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது. அதில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தை விட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து இந்தக்குழுவின் துணைத் தலைவரான பிஜேடி தலைவர் பார்த்ருஹரி மஹ்தாப் கூறுகையில், " அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது பிராந்திய மொழி இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
பிரிவு "ஏ" மாநிலங்களில் இந்தி மொழிக்கு தகுந்த இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும். அது 100 சதவீதம் பின்பற்றப்பட வேண்டும். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐஐடி, மத்திய பல்கலை, கேந்திர வித்யாலையாக்களில் இந்தியே பயிற்று மொழியாகவும், பிறமாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
பனாரஸ் இந்து பல்கலை. டெல்லி பல்கலை. ஜமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலை-களில் 20-30 சதவீதம் தான் இந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது. இங்கு 100 சதவீதம் இந்தி மொழி பயன்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலம் என்பது வெளிநாட்டு மொழி. அதனால் நாம் இந்த காலனியாதிக்க சிந்தனைகளில் இருந்து வெளியேற வேண்டும்.
இஸ்ரோ அல்லது டிஆர்டிஓ மற்றும் உள்துறை அமைச்சகங்களில் 100 சதவீதம் இந்தி மொழி பயன்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தி மொழியின் பயன்பாட்டைப் பொறுத்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரசேதங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்ராகண்ட், ஜார்கண்ட், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை பிரிவு "ஏ". குஜராத் மகாராஷ்டிரா, பஞ்சாப், மற்றும் சண்டிகர், டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் பிரிவு "பி". மற்ற மாநிலங்கள் பிரிவு "சி" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குழுவின் 11வது அறிக்கை இதுவாகும். இந்த மூன்று ஆண்டுகளில் இந்தக் குழு இரண்டு அறிக்கைகளை வழங்கி உள்ளது.
அலுவல் மொழிச்சட்டம் 1963 -ன் கீழ் கடந்த 1976-ஆம் ஆண்டு இந்த குழு அமைக்கப்பட்டது. இதில், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தக் குழு இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து தனது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும். இந்தப் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் குடியரசு தலைவரின் விருப்பம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT