Published : 10 Oct 2022 04:44 AM
Last Updated : 10 Oct 2022 04:44 AM
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், தாமரச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹர்சீனா (30). கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
இதன் பிறகு அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. சிறுநீரக கற்கள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றார். அண்மையில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்தபோது அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஹர்சீனாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியதாவது. பிரசவ அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அடிக்கடி எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு அல்லது புற்றுநோய் கட்டி உருவாகி இருக்கலாம் என்று உள்ளூர் மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். கடந்த 5 ஆண்டுகளாக கடும் அவதிப்பட்டு வந்தேன்.
அண்மையில் தனியார் மருத்துவமனை மருத்துவர் சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. தற்போது அறுவை சிகிச்சை மூலம் எனதுவயிற்றில் இருந்து 12 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்கோல் அகற்றப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத் துறையில் புகார் அளித்து, இழப்பீடு கோரியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி தலைவர் கோபி கூறும்போது, “புகார் அளித்துள்ள ஹர்சீனா 3-வது பிரசவத்துக்கே அரசு மருத்துவமனைக்கு வந்தார்.அவருக்கு ஏற்கெனவே 2 பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்றிருக்கிறது. இருமுறையும் அறுவைச் சிகிச்சை மூலமே குழந்தை பிறந்திருக்கிறது. கோழிக்கோடு அரசு மருத்துவமனை மீது புகார் கூறுவது ஏற்புடையது கிடையாது. நாங்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் எங்களது மருத்துவ உபகரணங்கள் எதுவும் காணாமல் போகவில்லை" என்று தெரிவித்தார்.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, “ஹர்சீனாவுக்கு ஏற்பட்டது மிகவும் துயரமானது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT