Published : 09 Oct 2022 07:49 AM
Last Updated : 09 Oct 2022 07:49 AM
புதுடெல்லி/பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் தேர்தலில் வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று (அக்டோபர் 8) கடைசி நாளாகும். நேற்று வரை இருவரின் வேட்புமனுவும் வாபஸ் பெறப்பட வில்லை. இதையடுத்து கட்சித் தலைவர் தேர்தலில் இருமுனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் புதிய தலைவரை ‘ரிமோட் கன்ட்ரோல்' மூலம் எங்கள் குடும்பத்தினர் இயக்க மாட்டார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் வெற்றிகரமாக நேற்றுடன் ஒருமாதத்தை நிறைவு செய்தார்.
இந்நிலையில் நேற்று துமக்கூருவை கடந்து துருவக்கெரே நோக்கி நடந்த ராகுலின் யாத்திரையில் முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி, சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே பங்கேற்றனர். பின்னர் துருவக்கெரேவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது: அடுத்த 6 மாதங்களில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காகவோ, 2024 மக்களவைத் தேர்தலுக்காகவோ இந்த பாத யாத்திரையை நான் மேற்கொள்ளவில்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டிவரும் வேளையில் ஒற்றுமையை ஏற்படுத்தவே இந்த யாத்திரையை மேற்கொண்டு இருக்கிறேன்.
ஒரு மாதத்துக்கு முன்பு சில நூறு பேருடன் தொடங்கிய எனது பயணத்தில் இன்று லட்சக் கணக்கானோர் இணைந்துள்ளனர். வேலைவாய்ப்பின்மை, சமத்துவமின்மை, விலைவாசி ஏற்றம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் இந்த யாத்திரையில் இணைகின்றனர். வெறுப்பையும், வன்முறையையும் பரப்புவோருக்கு எதிராக போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 2 பேர் போட்டியிடுகின்றனர். இருவருமே தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களை கைப்பாவை என விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. புதிய தலைவரை நாங்கள் ரிமோட் கன்ட்ரோலில் இயக்க மாட்டோம். ரிமோட் கன்ட்ரோலில் இயக்குவதாக கூறுவதே அவர்களை இழிவுப்படுத்தும் செயலாகும். இவ்வாறு ராகுல் காந்தி பாஜகவுக்கு பதில் அளிக்கும் வகையில் தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் நடத்திவரும் பாத யாத்திரை முகாமிலேயே, கட்சித் தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்றும், அதில் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள், நிர்வாகிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT