Published : 09 Oct 2022 07:42 AM
Last Updated : 09 Oct 2022 07:42 AM

சைவம் இந்து மதம் கிடையாதா, யார் சொன்னது? - காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் கடும் கண்டனம்

புதுடெல்லி: கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்நிலையில், “கலையை சரியாக கையாள வேண்டும். தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழன் இந்து அரசனாக ஆக்கப்படுவது போன்றவை கலை இலக்கியம் மட்டுமில்லாமல் திரைப்படத்திலும் நடைபெற்று வருகிறது" என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் நீண்ட விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறது.

சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் இந்து என்று ஒரு தரப்பினரும் அவர் தமிழ் சைவ சமயத்தை சேர்ந்தவர் என்று மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் கூறும்போது, “இந்து மதம் என்ற பெயர் ராஜ ராஜ சோழன் காலத்தில் கிடையாது. வைணவம், சைவம், சமணம் என்றுதான் இருந்தது. இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர்" என்று கூறினார்.

இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். இந்து மதத்தின் அடையாளங்களை மறைக்க சிலர் முற்படுகின்றனர்" என்று குற்றம் சாட்டினார்.

பாஜக மூத்த தலைவர்கள் பலரும், இந்து மதத் தலைவர்களும் கமல்ஹாசனின் கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்த பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவருமான கரண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேரரசர் ராஜராஜ சோழன் இந்து மன்னர் கிடையாது என்று கருத்துகள் வெளியாகி வருவது வியப்பளிக்கிறது, வேடிக்கையாக இருக்கிறது. சிவபெருமான் ஆதி இந்து கடவுள். காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல் தமிழகத்தின் ராமேசுவரம் வரை கோடிக்கணக்கான மக்கள் அவரை வழிபடுகின்றனர். பேரரசர் ராஜ ராஜ சோழன் தஞ்சையில் பிரம்மாண்ட பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவர். அந்த கோயில் இன்றளவும் கட்டிட கலையின் அதிசயமாகப் போற்றப்படுகிறது. அவர் சைவ மதத்தை சேர்ந்தவர், இந்து மதத்தை சேர்ந்தவர் கிடையாது என்று கூறுவது அபத்தமானது. அதாவது, ஒருவர் கத்தோலிக்கர், ஆனால் கிறிஸ்தவர் கிடையாது என்று கூறுவதுபோல உள்ளது. இந்து மதத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்து என்ற வார்த்தை பிற்காலத்தில் உருவாகி இருக்கலாம். ஆனால் சிவன், விஷ்ணு, அனுமன், விநாயகர், மகாலட்சுமி, மகா காளி கடவுள்களை பல நூற்றாண்டு காலமாக நாம் வழிபட்டு வருகிறோம். சைவம், வைணவம், சக்தி என்ற பெயர்களில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. மூன்றுமே இந்து மதம்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x