Published : 08 Oct 2022 10:23 PM
Last Updated : 08 Oct 2022 10:23 PM
மும்பை: சிவசேனாவின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரண்டு பிரிவினரும் சிவசேனா கட்சியின் பெயரையும் சிவசேனா கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த முடியாது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக அக்கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது. பொதுவெளியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா என அறியப்பட்டாலும், சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் தலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், 12 சிவசேனா எம்.பி.க்கள் சேர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனியாக மனு அளித்து, தங்களை தனியாகச் செயல்பட அங்கீகரிக்குமாறு கோரி உள்ளனர். மேலும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியுள்ளது.
பதிலுக்கு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி குழுவை சிவசேனாவாக அங்கீகரிக்கக் கூடாது என்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, தலைமை தேர்தல் ஆணையத்தை நாடியது.
இந்நிலையில் மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் இரு அணிகளும் சின்னத்தை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில்தான் தற்காலிக உத்தரவாக இரு அணிகளும் சிவசேனாவின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சின்னம் முடக்கப்பட்ட நிலையில், மும்பையின் அந்தேரி கிழக்கில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரு அணியும் வேறு பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...