Published : 08 Oct 2022 06:15 PM
Last Updated : 08 Oct 2022 06:15 PM
பெங்களூரு: “காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும். மற்றபடி ரிமோட் கன்ட்ரோலில் இயங்குபவர்கள் என்ற விமர்சனம் போட்டியாளர்களை இகழ்வதாகும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது காங்கிரஸ் தலைவர் தேர்தல். ஒருபுறம் இந்திய ஒற்றுமை யாத்திரை என்று ராகுல் காந்தி பயணப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் கட்சித் தலைவர் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக்கப்பட்டால் அவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் தலைவராகவே இருப்பார் என்ற விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதில் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்குமே தனித்தனி தகுதி உள்ளது. இருவருக்கும் வெவ்வேறு பார்வை உள்ளது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவரை நீங்கள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்குபவர் என்று அழைத்தாலும், அது இருவருக்குமே இழிவுதான். காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும்.
நாங்கள் பாசிச கட்சி அல்ல. நாங்கள் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்கள். வெவ்வேறு கருத்துகளையும் வரவேற்கும் தன்மை கொண்டவர்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி முழுமையும் ஒரே குழுவாக செயல்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
நம் அரசியல் சாசனம், இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. அப்படி என்றால் நம் மொழிகள், மாநிலங்கள், அவற்றின் பாரம்பரியங்கள் என அனைத்திற்கும் சமமான இடம் இருக்கிறது என்று அர்த்தம். அதுதான் நம் தேசத்தின் இயல்பு. வெறுப்பையும், வன்முறையையும் பரப்புவது என்பது தேச விரோதச் செயல். அவ்வாறாக வெறுப்பை, வன்முறையை பரப்புபவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்.
பாஜக இந்த தேசத்தை பிரித்து வெறுப்பை பரப்புகிறது. இது எப்போதும் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவாது. அதனால்தான் நான் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளேன். என்னோடு சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளனர். பாஜக முன்னெடுக்கும் பிரிவினை அரசியலால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர். அதேபோல் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர்" என்றார். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT