Published : 08 Oct 2022 01:43 PM
Last Updated : 08 Oct 2022 01:43 PM

‘அக்னிபாதை’யின் கீழ் அடுத்த ஆண்டு முதல் விமானப்படையில் பெண்கள் சேர்ப்பு: விமானப்படை தளபதி அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் ‘அக்னிபாதை’ திட்டத்தின் கீழ் பெண்களை சேர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி தெரிவித்தார்.

இந்திய விமானப்படை தினம் இன்று (அக்.08) கொண்டாடப்படுகிறது. 90-வது விமானப்படை தினம் சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் கொண்டாடப்பட்டது. விமானப்படை தினங்களின் கொண்டாட்டமானது, தலைநகர் டெல்லிக்கு வெளியே நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "விமானப்படை அதிகாரிகளுக்காக ஆயுத அமைப்பு கிளை ஒன்றை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு செயல்பாட்டுக் கிளை ஒன்று உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன்மூலம் அனைத்து வகையான நவீன ஆயுதங்களையும் கையாள முடிவதுடன், ரூ.3,400 கோடி வரை மிச்சப்படுத்த முடியும்.

விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் ‘அக்னிபாதை’ திட்டத்தின் கீழ் பெண்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்னிபாதை திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் வீரர்களை தெரிவுசெய்வது ஒரு சவாலான விஷயமாகவே இருக்கிறது என்றாலும், நாட்டின் இளைஞர்களின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.

இந்திய விமானப்படையில் இணையும் ஒவ்வொரு அக்னி வீரரும் சரியான திறனுடனும் அறிவாற்றலுடனும் தனது சேவையைத் தொடங்க வேண்டும் என்பதற்காக, எங்களது பயற்சி செயல்பாட்டு முறைகளை மாற்றியிருக்கிறோம். வருகின்ற டிசம்பர் முதல் 3,000 அக்னி வாயு வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை உயரும். அடுத்த ஆண்டு முதல் அக்னி வீராங்கனைகளையும் அறிமுகம் செய்ய திட்டமிடப்படுள்ளது. இதற்கான அடிப்படை வேலைகள் தொடங்கியுள்ளது.

கடந்த ஓராண்டாக போர் சேவைகளைத் தவிர, நாட்டின் பல சவால்களிலும் இந்திய விமானப்படை தனது பங்களிப்பை செய்துள்ளது. தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் நிலைநிறுத்தப்படுவதாகட்டும், போர்ப் பற்றம் உள்ள பகுதிகளில் இருந்து இந்தியார்களை மீட்டு வருவதாகட்டும் அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய விமானப்படைக்கு பாராட்டுகள்.

நிலம், நீர் , காற்று ஆகிய களங்கள் இன்று ஸ்பேஸ் மற்றும் சைபர் தொழில்நுட்பமாக விரிவடைந்து ஒரு கலப்பு போர் முறைக்கு மாற்றமடைந்துள்ளது. இந்த நேரத்தில் பாரம்பரிய முறைகள், ஆயுதங்கள் ஆகியவை நவீனமாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலும் மாற்றமடைய வேண்டும். கடந்த கால மனநிலையுடன் நாம் எதிர்கால சிக்கல்களைக் கையாள முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x