Published : 07 Oct 2022 04:58 AM
Last Updated : 07 Oct 2022 04:58 AM
பெங்களூரு: கர்நாடகாவில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பாத யாத்திரையில் காங்கிரஸின் தலைவரும் அவரின் தாயாருமான சோனியா காந்தி நேற்று பங்கேற்றார். நீண்ட இடைவெளிக்குப்பின் சோனியா காந்தி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதால் காங்கிரஸார் உற்சாகம் அடைந்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.,யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
தசரா திருவிழா காரணமாக 2 நாட்கள் பாத யாத்திரைக்கு ஓய்வளித்த ராகுல் காந்தி, நேற்று மண்டியாவில் உள்ள பாண்டவ புராவில் பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினர். காங்கிரஸின் இடைக்கால தலைவரும், அவரது தாயாருமான சோனியா காந்தி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பாத யாத்திரையில் பங்கேற்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு வாரணாசியில் நடந்த பாத யாத்திரைக்கு பிறகு சோனியா காந்தி இந்த யாத்திரையில் பங்கேற்றதால் காங்கிரஸார் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அதிலும் கரோனா பாதிப்புக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த சோனியா காந்தி நீண்ட காலத்துக்கு பின் இதில் பங்கேற்றதால் காங்கிரஸார் மகிழ்ச்சி அடைந்தனர். காங்கிரஸ் தொண்டர்கள் சோனியா, ராகுலை வாழ்த்தி வழிநெடுக முழக்கம் எழுப்பினர்.
சோனியா காந்தி உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டே அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தார். அப்போது ராகுல் குறுக்கிட்டு, 'நீங்கள் நடந்தது போதும். காரில் வாருங்கள்' என வற்புறுத்தினார். மேலும் கழன்று இருந்த சோனியா காந்தியின் ஷூ லேஸை கட்டிவிட்டு, அன்பை வெளிப்படுத்தினார். அம்மாவின் மீதான மகனின் பாசத்தை கண்டு காங்கிரஸார் நெகிழ்ந்தனர்.
சோனியாவின் ஷூ லேஸை ராகுல் காந்தி குனிந்து கட்டிவிடும் புகைப்படத்தை சசி தரூர், டி.கே.சிவகுமார் போன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப் படமும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT