Published : 06 Oct 2022 05:32 PM
Last Updated : 06 Oct 2022 05:32 PM

திரவுபதி முர்மு குறித்த சர்ச்சை கருத்து - காங்கிரஸ் பிரமுகர் மன்னிப்பு கோர தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் | கோப்புப் படம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து தகாத வார்த்தைளுடன் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் மன்னிப்பு கோர வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, குஜராத் 70% உப்பை நாட்டிற்காக உற்பத்தி செய்கிறது என்றும், அந்த வகையில் நாட்டு மக்கள் பெரும்பாலும் குஜராத் உப்பைத்தான் உண்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அவரது இந்த பேச்சை, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் உதித் ராஜ் கடுமையாக விமர்சித்திருந்தார். அனுகூலத்தைப் பெறுவதற்காக முக்கியமான நபர் ஒருவரிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்வதைப் போல் திரவுபதி முர்முவின் பேச்சு இருப்பதாக விமர்சித்த உதித் ராஜ், திரவுபதி முர்முவைப் போன்ற ஒருவர் எந்த நாட்டிற்கும் குடியரசுத் தலைவராக ஆகக் கூடாது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உதித் ராஜின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. உதித்ராஜின் பேச்சு எதிர்பாராதது என்றும், கவலைதரக் கூடியது என்றும் விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்று பேசுவது இது முதல்முறை அல்ல என்றும் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரவுபதி முர்முவை ராஷ்ட்ர பத்னி என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கி, பின் மன்னிப்பு கோரியதை அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பித் பத்ராவுக்கு பதில் அளித்துள்ள உதித் ராஜ், ஆதிவாசிகளை தலித்துகள் விமர்சிப்பார்கள் என்றும், அவர்களுக்காக போராடவும் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டு, தலித் என்ற வகையில் ஆதிவாசியான திரவுபதி முர்முவை விமர்சிக்க தனக்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவியுடன் இணைத்து தனது கருத்தை புரிந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். எஸ்.சி / எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி கிடைத்ததும், தங்கள் வேரை மறந்துவிடுவது வழக்கமாக உள்ளதாகவும், அந்த கவலையில்தான் தான் அவ்வாறு கூறியதாகவும் உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உதித் ராஜின் கருத்துக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டின் உயரிய பதவியை வகிக்கும் ஒருவரை, தனது கடின உழைப்பால் உயர்ந்த ஒரு பெண்மணியை தகாத வார்த்தையால் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும், அவமதிக்கும் வகையிலான தனது பேச்சுக்காக உதித் ராஜ் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x