Published : 06 Oct 2022 11:57 AM
Last Updated : 06 Oct 2022 11:57 AM
மாண்டியா: கர்நாடகாவில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். உடல்நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த சோனியா காந்தி யாத்திரையில் பங்கேற்று நடந்தார்.
விஜயதசமிக்கு பின்னர் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று (செப்.6) காலையில் மாண்டியா பகுதியில் மீண்டும் தொடங்கியது. இதில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு தொண்டர்கள் தலைவர்கள் சூழ சிறிது தூரம் நடந்தார். பின்னர் காரில் ஏறிச்சென்றார்.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் விதமாக, மாலையில் பெல்லாரியில் நடைபெற இருக்கும் பேரணிக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசுவார் என்று எதிர்க்கப்படுகிறது. முன்னதாக, புதன்கிழமை சோனியா காந்தி பெகூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
இதுகுறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் யாத்திரையில் சோனியா காந்தி கலந்து கொண்டது கட்சிக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார், மேலும் அவர், "விஜய தசமிக்கு பின்னர் கர்நாடகாவில் விஜயதசமி நடக்கிறது கர்நாடகா வீதிகளில் சோனியா காந்தி நடந்திருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. கர்நாடகாவில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். பாஜகவின் ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது" என்று கூறினார்
முன்னதாக, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி செப்,7 ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரையின் மூலம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்களில் சுமார் 3,500 கி.மீ.,க்கும் மேல் நடக்கத்திட்டமிட்டுள்ளார். தமிழகம் கேரளா ஆகிய மாநிலங்களில் நிறைவடைந்த யாத்திரை செப்.30 ம் தேதி கர்நாடகாவிற்குள் நுழைந்ததது.
இந்த யாத்திரையில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி திங்கள் கிழமை மைசூர் வந்தடைந்தார். இந்த யாத்திரை ஆயுத பூஜை, விஜய தசமிக்காக செவ்வாய் புதன் ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT