Published : 04 Oct 2022 05:46 PM
Last Updated : 04 Oct 2022 05:46 PM

ஜம்மு காஷ்மீரில் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஜம்மு: ஜம்மு காஷ்மீரை மூன்று குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு திங்கள்கிழமை சென்ற அமித் ஷா, இன்று காஷ்மீர் எல்லைப்புர மாவட்டமான ராஜோரியில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் அங்கு நடந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் இங்குள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியல் இன மக்கள், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டுக்கான பலன்கள் கிடைத்துள்ளன.

சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தால் ஜம்மு காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என்று சொன்னவர்களுக்கு இன்றைய இந்த பேரணியும், மோடி... மோடி... என்ற உங்களின் முழக்கமும்தான் பதில்.

ஜம்மு காஷ்மீரை மூன்று குடும்பங்கள்தான் இதுவரை ஆட்சி செய்து வந்தன. ஆனால் இப்போது பஞ்சாயத்து. நகராட்சி கவுன்சில்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30,000 மக்கள் பிரதிநிதிகள் வசம் அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் வளச்சியே பிரதமர் மோடியின் பிரதான நோக்கம்" என்று தெரிவித்தார்.

ஜம்முவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கும் அமித் ஷா, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

நாளை ஸ்ரீநகர் ராஜ்பவனில் நடக்கும் கூட்டத்தில் யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்கிறார்.

இணைய சேவை துண்டிப்பு

அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில், அங்கு சிறைத்துறை இயக்குநரான ஹேமந்த் லோகியா நேற்று கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக லோகியாவின் வீட்டு வேலையாள் யாசிர் அகமதுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறைத்துறை இயக்குநரின் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்ட பீப்புள்ஸ் ஆண்டீ பாசிஸ்ட் ஃப்ரண்ட் (பிஏஎஃப்எஃப்) என்ற குழு, இது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கான சிறிய பரிசு என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜோரி உள்ளிட்ட சில பகுதிகளில் இணைய சேவை இரவு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x