Published : 04 Oct 2022 07:50 AM
Last Updated : 04 Oct 2022 07:50 AM
புதுடெல்லி: மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதே ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் 9-வது ஆண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: தூய்மை இந்தியா (கிராமப் புறம்) திட்டம் பழக்கவழக்கத்தை மாற்றும் இயக்கமாக திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் 60 கோடிக்கும் மேற்பட்டோர் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளனர். ஐ.நா.சபையின் நீடித்த வளர்ச்சி இலக்கின் 6-வது பிரிவு அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த இலக்கை 2030-க்குள் எட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியா முன்கூட்டியே எட்டிவிட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின் 2-வது கட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து 6 லட்சம் கிராமங்களிலும் 100% கழிவறைகளை கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.16 லட்சம் கிராம மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதில் இருந்து 100% விடுபட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் 2024-க்குள் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 2019-ல் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது 3.23 கோடி குடியிருப்புகளுக்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 10.27 கோடியாக அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில், கழிவறைகள், கைகளை சோப்பு போட்டு கழுவுதல், குழாய் மூலம் குடிநீர் விநியோகம் ஆகியவை நோய் பரவுவதை தடுக்க பெரிதும் உதவியதை அனைவரும் உணர்ந்தனர். இவ் வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT