Published : 03 Oct 2022 03:39 PM
Last Updated : 03 Oct 2022 03:39 PM
பெங்களூரு: “ராகுல் காந்தி ஒரு போலி காந்தி” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு ஒரு ஊழல் அரசு என்றும், 40 சதவீத கமிஷன் வாங்கும் அரசு என்றும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இதனை பாஜக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஊழல், வன்முறை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வரை காங்கிரஸ் அதனை எழுப்பும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள பதில்: “ராகுல் காந்தி ஒரு போலி காந்தி. போலி காந்திகள் குறித்து நான் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர் சிவகுமார் என பலரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியவர்கள். நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியதால் தற்போது அவர்கள் வெளியே இருக்கிறார்கள். மொத்த காங்கிரஸ் நிர்வாகிகளுமே ஜாமீன் பெற்றுத்தான் வெளியே இருக்கிறார்கள். அது ஒரு ஜாமீன் கட்சி. அவர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் தலைவர்களுக்கு பணம் வழங்கும் இயந்திரமாக அது இருந்தது. தற்போது அவ்வாறு இல்லாததால் அவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். எனவே, தற்போதைய பாஜக அரசை அவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். உண்மையில் தற்போதைய கர்நாடக பாஜக அரசு ஊழல் அரசோ, 40 சதவித கமிஷன் அரசோ கிடையாது. எனினும், தீய நோக்கத்துடன் பிரசாரம் செய்கிறார்கள்.
ஊழல் சம்பவங்கள் ஏதேனும் இருந்தால், அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரும்படி நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அவ்வாறு கொண்டுவந்தால் அதன் மீது விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர அரசு தயாராக இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு 40 சதவீத கமிஷன் அரசு என பாஜக அரசுக்கு முத்திரை குத்த காங்கிரஸ் முயல்கிறது” என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT