Published : 03 Oct 2022 10:36 AM
Last Updated : 03 Oct 2022 10:36 AM

உ.பி.,யில் துர்கா பூஜை பந்தலில்  தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி, 60 பேர் காயம்

உத்தரப்பிரதேசத்தின் படோகியில் அமைக்கப்படிருந்த துர்கா பூஜை பந்தலில் நடந்த தீ விபத்து பாதிப்புகளை போலீஸார் பார்வையிடுகின்னர்.

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், படோகியில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஞாயிற்றுகிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

வடமாநிலங்களில் நவராத்திரி வாரத்தில் பொது இடங்களில் பந்தல் அமைத்து அதில், துர்கா தேவி சிலையை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் துர்கா பூஜைக்காக பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் படோயி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தல் ஒன்றில் ஞாயிற்றுக்கிழை இரவு சுமார் 9 மணி அளவில் ஆரத்தி தீபம் காட்டும் பொழுது தீ விபத்து ஏற்பட்டது. மூன்று குழந்தைகள் இரண்டு பெண்கள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு, துர்கைக்கு ஆரத்தி காண்பித்துக்கு கொண்டிருந்தபோது, பந்தலின் நுழைவு வாயிலில் இருந்த துணியில் திடீரென தீப்பிடித்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்த வினய் பிரகாஷ் என்பவர் தெரிவித்துள்ளார். விபத்து நேர்ந்த போது பூஜை பந்தலில் 150 க்கும் அதிகமானோர் இருந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மாவட்ட நீதிபதி கவுரங் ரதி கூறுகையில், "படோகி-ல் நடந்த தீ விபத்தில் ஞாயிற்றுக்கிழமை 45 வயது பெண்,12 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்தநிலையில் திங்கள்கிழமை காலை வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான் என்று தெரிவித்த அவர் விபத்தில் மூன்று குழந்தைகள் இரண்டு பெண்கள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்துள்ள 22 பேர் சிகிச்சைக்காக பனாரஸ் இந்து பல்கலை தீவிர சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு மூலமாக விபத்து காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது" என்று தெரிவித்தார்

விபத்து குறித்து விசாரணை செய்ய தீயணைப்புத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய நான்கு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ள வாரணாசி மண்டல ஏடிஜிபி ராம்குமார், "சிறப்பு புலனாய்வு குழு விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x