Published : 17 Jul 2014 01:47 PM
Last Updated : 17 Jul 2014 01:47 PM
பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க அனு மதிக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அமளி யில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வரும் திங்கள் கிழமை (ஜூலை 21-ம் தேதி) மதியம் 12 மணிக்கு விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேல் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க கடந்த புதன்கிழமை நிகழ்ச்சி நிரலில் பட்டியல் இடப்பட்டிருந்தது. அப்போது, விவாதம் நடத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு கடிதம் எழுதினார். அதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வியாழக்கிழமை மாநிலங்களவை கூடியதும் பேசிய அவைத் தலைவர் ஹமீது அன்சாரி, “இந்த விவகாரத்தை விவாதிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டேன். இதை யடுத்து, விவாதத்துக்கு ஒப்புக் கொள்வதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அதை எந்த தேதியில் நடத்துவது என்பதை ஆலோசனை செய்து சொல் வதாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எனக்கு தகவல் அளித்துள்ளார். எனவே, வேறொரு நாளில் இந்த விவாதத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அப்போது, காங்கிரஸ், இடது சாரிக் கட்சிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், திரிண மூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தொடர்பான விவாதத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.
மைத்ரேயன் பேச்சுக்கு எதிர்ப்பு
அதிமுக உறுப்பினர் வி.மைத்ரேயன் பேசும்போது, “பாலஸ்தீனமோ, இலங்கையோ, அப்பாவி பொதுமக்கள் எங்கு கொல்லப்பட்டாலும் அதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால், எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் நாட்டில் மக்கள் கொல்லப்படுவது குறித்து ஆத்திரத்துடன் பேசும் உறுப் பினர்கள், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைப் பற்றி பேசாமல் இருப்பது ஏன்?” என்றார்.
மைத்ரேயன் பேச்சுக்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது அவையின் தலைவர் பொறுப்பில் அமர்ந்திருந்த துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “மைத்ரேயனின் பேச்சு அவை உறுப்பினர் யாரையாவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதாக இருந்தால், அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்றார்.
அப்போது பேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், எதிர்க் கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், “இஸ்ரேல் அமைந்துள்ள மேற்கு ஆசியாவைச் சார்ந்துதான் இந்தியாவின் பொருளாதார நலன் கள் உள்ளன. இந்தியாவின் நலனை பாதுகாக்க, அங்கு அமைதி நிலவ வேண்டியது அவசியம்” என்றார்.
கூச்சல் குழப்பம் தொடர்ந் ததைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் அவை கூடியபோது, அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் பேசும்போது, “பிறிதொரு தேதியில் இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும். தற்போது ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்” என்று அறிவித்தார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி கூறும்போது, “சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இஸ்ரேலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், பிரதமர் மோடியும் கையெழுத்திட்டுள்ளார். அவ்வாறு இருக்கும்போது, நாடாளு மன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்காதது ஏன்?” என்றார்.
அடுத்தடுத்து 2 முறை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்ட நிலையில், மாலை 3 மணியளவில் மீண்டும் அவை கூடியபோதும் அமளி தொடர்ந் ததால், நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக் கப்பட்டன.
இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் பற்றி வரும் திங்கள்கிழமை 2 மணிக்கு விவாதத்தை நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக வியாழக்கிழமை மாலையில் தகவல் வெளியானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT