Published : 02 Oct 2022 03:53 AM
Last Updated : 02 Oct 2022 03:53 AM
புதுடெல்லி: இந்தியாவின் தேசியச் சின்னமான நான்முகச் சிங்கம்,புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில், வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட நான்முகச் சிங்கத்தை தாங்கிப் பிடிக்க 6,500 கிலோ எடையில் நான்குபுறமும் இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத்தை பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், வழக் கறிஞர்கள் அல்டானிஷ் ரெய்ன், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “வாரணாசியில் உள்ள சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்தில் சிங்கங்கள் அமைதியுடன் காட்சியளிக் கின்றன. ஆனால், பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்தில் சிங்கங்கள் மூர்க்கத்தனமாகவும், ஆக்ரோஷத்துடனும் காணப்படுகின்றன” என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தைக்கேட்ட நீதிபதிகள், “புதிய நாடாளுமன்றத்தின் மீது நிறுவப்பட்டுள்ள சிங்கச் சிற்பம், 2005-ம் ஆண்டு இந்திய அரசு சின்னம் சட்ட விதிகளை மீறவில்லை” என்று தெரிவித்து, அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மேலும், நீதிபதிகள் தங்களது உத்தரவில், “மனுதாரர் தரப்பு வாதத்தைக் கேட்டு, புகாருக்கு உள்ளான சின்னத்தை ஆராய்ந்ததில், இது எந்த வகையிலும் சட்ட விதிகளுக்கு முரணானது என்றுகூறமுடியவில்லை. மேலும், சட்டத்தின் எந்த விதியும் மீறப்பட்டதாகவும் தெரியவில்லை. எனவே, இந்தமனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT