Published : 02 Oct 2022 05:41 AM
Last Updated : 02 Oct 2022 05:41 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அபு சாலையில் நேற்று முன்தினம் இரவு பாஜக பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி கூட்ட மேடைக்கு வருவதற்கு இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. அப்போது மேடையேறிய பிரதமர் மோடி, மைக்கை தவிர்த்து விட்டு மக்களிடம் நேரடியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பொதுக்கூட்ட மேடைகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை உள்ளது. நான் இங்கு வருவதற்கு காலதாமதமாகி விட்டது. ஒலிபெருக்கி பயன்படுத்த தடை இருப்பதால் அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று எனது மனம் சொல்கிறது. எனவே நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களிடையே பேச முடியாமல் போவது எனக்கு வருத்தமாக உள்ளது. உங்களின் அன்புக்குக் கடமைப்பட்டு நான் இங்கு மீண்டும் வருவேன் என்று உறுதியளிக்கிறேன். அப்போது வட்டியுடன் முதலுமாக நான் பேசுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். அதன்பின் மேடையில் தலைதாழ்ந்து பிரதமர் மோடி வருத்தம் கோரினார். மேலும் கூட்டத்தினரை நோக்கி மூன்று முறை அவர் வணக்கம் தெரிவித்தார். பிரதமரின் செய்கையைக் கண்ட பொதுமக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மனதில் பிரதமர் மோடி இடம்பெற்றுவிட்டார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT